மும்பை,
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி நேற்று மராட்டிய மாநிலம் நாக்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் ஹைபிரிட் ரக வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும். நாட்டில் உள்ள 36 கோடி பெட்ரோல், டீசல் வாகனங்களை ஒழிக்க வேண்டும். இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களை ஒழிக்க 100 சதவீதம் வாய்ப்புள்ளது. அது கடினமானது தான். ஆனால் சாத்தியமில்லாதது இல்லை. இதுதான் எனது நோக்கம்.
இந்தியா எரிபொருள் இறக்குமதிக்காக ரூ.16 லட்சம் கோடி செலவு செய்கிறது. இந்த பணத்தை விவசாயிகள், கிராமங்களின் வளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க பயன்படுத்த முடியும். பெட்ரோல், டீசல் மற்றும் மின்சாரத்தால் இயங்க கூடிய ஹைபிரிட் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி.யை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கும் திட்டம் நிதித்துறை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பயோ எரிபொருள் பயன்பாடு மூலம் நாம் எரிபொருள் இறக்குமதியை நிறுத்த முடியும். கண்டிப்பாக ஒரு மாற்றம் வரும். எரிபொருள் இறக்குமதி நிறுத்தப்படும். நமது நாடு தற்சார்பு நாடாக மாறும். நான் அதை உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.