பாஜக கச்சத்தீவு குறித்து பேசி வரும் இதேவேளையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள இந்தியாவின் ஓர் அங்கமான அருணாச்சலப் பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. அதைத் தடுக்க பாஜக அரசு செய்தது என்ன? என காங்கிரஸ் கட்சியினர் கவுண்ட்டர் அட்டாக் செய்து வருகின்றனர். இதன் பின்னணி என்ன?
தமிழக பாஜக அண்ணாமலை கச்சத்தீவு குறித்து வெளியிட்ட ஆர்டிஐ தகவல் அடிப்படையில் பாஜக – காங்கிரஸ், திமுக இடையே மோதல் வெடித்துள்ளது. குறிப்பாக, அந்த ஆர்டிஐ தகவலில், ”தங்களிடம் அனுமதி பெறாமல் இந்திய ராணுவம் கச்சத்தீவுக்கு வரக்கூடாது என்று கூறிய இலங்கை ராணுவம், 1955-ல் கச்சத் தீவில் பயிற்சியில் ஈடுபட்டது.
அதன்பின் தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கச்சத்தீவு மீதான உரிமையை விட்டுக்கொடுக்க இந்தியா முடிவு செய்தது. இலங்கை சீனாவின் பக்கம் சாய்ந்துவிடக் கூடாது உள்ளிட்ட காரணங்களும் இந்தியா இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. 1974-ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய வெளியுறவுத் துறை செயலர் கேவல் சிங், மத்திய அரசின் இந்த முடிவு குறித்து அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த கருணாநிதி தெரியப்படுத்தியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி, “இந்தப் புதிய தகவல்கள் ஒவ்வொரு இந்தியரையும் ஆத்திரமடையச் செய்துள்ளது. காங்கிரஸை ஒருபோதும் நம்பக்கூடாது என்பதை மக்களின் மனதில் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. கடந்த 75 ஆண்டுகளாக இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை காங்கிரஸ் பலவீனப்படுத்தி வருகிறது. நாட்டின் நலன்களை அந்த கட்சி முற்றிலுமாகப் புறக்கணித்து வருகிறது” எனக் கருத்து கூறியிருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியா – இலங்கை ஒப்பந்தம் போடப்பட்ட இரண்டே ஆண்டுகளில் இந்திய மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்பட்டன. இந்த ஒப்பந்தம் போடப்பட்டதன் விளைவு, கடந்த 20 ஆண்டுகளில் 6,184 இந்திய மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 1,175 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கையர்களால் இந்த 20 ஆண்டுகளில் கைப்பற்றப்பட்டுள்ளது. கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டபோது மாநில அரசிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று திமுக கூறுவதை ஏற்க முடியாது. இந்தியாவின் நிலப்பரப்பில் அப்போதைய மத்திய அரசும், பிரதமர்களும் காட்டிய அலட்சியமே இது மாதிரியான பிரச்சினைகள் தொடர்ந்து எழக் காரணம். முன்னாள் பிரதமர்கள் யாரும் கச்சத்தீவு பற்றி கவலைப்படவில்லை என்பதுதான் உண்மை” எனப் பேசினார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் ரியாக்ஷன் என்ன? முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “1974-ம் ஆண்டில் இரு நாடுகளிடையே நடந்த பரிமாற்றத்தை மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்?. கச்சத்தீவின் பரப்பளவு 1.9 சதுர கி்.மீ.. அதனைத் தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு அவர்களுக்குச் சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி.
தவிர, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 27.1.2015 தேதியிடப்பட்ட ஆர்டிஐ மனுவை திரும்பப் பார்க்குமாறு வேண்டுகிறேன். அந்த ஆர்டிஐ பதிலில், இலங்கையிடம் கச்சத்தீவை இந்தியா வழங்கியதற்கான சூழலை நியாயப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இப்போது ஏன் வெளியுறவு அமைச்சகமும் அமைச்சரும் அந்தர் பல்டி அடிக்கின்றனர் எனத் தெரியவில்லை.
2000 சதுர கி.மீ இந்திய பூமியை சீனா அபகரித்திருக்கிறது. “எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை” என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பை மோடி நியாயப்படுத்தினார். மோடியின் பேச்சை சீனா உலகமெங்கும் பரப்பியது. சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது. நல்லுணர்வுடன் பரிமாற்றம் வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு” என்று அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின்,” பத்தாண்டுகளாகக் கும்பகர்ணத் தூக்கத்தில் இருந்துவிட்டு, தேர்தலுக்காகத் திடீர் மீனவர் பாச நாடகத்தை அரங்கேற்றுபவர்களிடம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கும் கேள்வி மூன்றுதான்.
1. தமிழ்நாடு ஒரு ரூபாய் வரியாகத் தந்தால், ஒன்றிய அரசு 29 பைசா மட்டுமே திருப்பித் தருவது ஏன்?
2. இரண்டு இயற்கைப் பேரிடர்களை அடுத்தடுத்து எதிர்கொண்டபோதும், தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபாய் கூட வெள்ள நிவாரணம் வழங்காதது ஏன்?
3. பத்தாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட சிறப்புத் திட்டம் என ஒன்றாவது உண்டா?
திசைதிருப்பல்களில் ஈடுபடாமல், இதற்கெல்லாம் விடையளியுங்கள் பிரதமர் அவர்களே” எனப் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், “1976-ல் கொடுக்கப்பட்ட கச்சத்தீவு பிரச்சினையை தேர்தலுக்காக மோடியும், அண்ணாமலையும் தற்போது பேசி வருகின்றனர். அண்ணாமலை எடுத்துக் கொடுத்த ஆர்டிஐ தகவலை தற்போது தேர்தலுக்காக பேசுகின்றனர்.
கச்சத்தீவை மீட்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது மத்திய பாஜக அரசு சார்பில் கச்சத்தீவு கொடுத்தது கொடுத்ததுதான். அதை திரும்பவும் மீட்க முடியாது என்றனர். தற்போது தேர்தலுக்காக கச்சத்தீவு பிரச்சினையை பேசுகிறார்கள்” என விமர்சித்தார்.
2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைக் கருத்தில்கொண்டு பாஜக இப்படியான தகவல்களை வெளியிடுவதாகக் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர். பாஜக கச்சத்தீவு குறித்து பேசி வரும் இதேவேளையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள இந்தியாவின் ஓர் அங்கமான அருணாச்சலப் பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களில் சீனா தங்களின் மொழியில் புதிய பெயர்களை அறிவித்தும், தங்கள் நாட்டு வரைபடத்தில் இணைத்தும் சீனா தொடர்ச்சியான அத்துமீறல்களை செய்துவருகிறது. இந்திய நிலத்தை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. எனவே, அதைத் தடுக்க பாஜக அரசு செய்தது என்ன? என காங்கிரஸ் கட்சியினர் கவுண்ட்டர் அட்டாக் செய்து வருகின்றனர்.
இப்படியாக கச்சத்தீவைக் கையிலெடுத்து பாஜக களமாட, சீனா அங்கிரமிப்பை சுட்டிக் காட்டி காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் விமர்சித்து கருத்து பதிவு செய்து வருகின்றனர்.