“தேர்தலுக்கு முன் மேலும் சில ஆம் ஆத்மி தலைவர்கள் கைதாக வாய்ப்பு” – டெல்லி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு

புதுடெல்லி: “பாஜகவில் இணையாவிட்டால் கைது செய்யப்படுவேன் என எனக்கு மிரட்டல் வருகிறது. நான் உட்பட ஆம் ஆத்மியின் மேலும் சில தலைவர்கள் குறிப்பாக, சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக், ராகவ் சதா உள்ளிட்டோர் தேர்தலுக்கு முன் கைது செய்யப்படலாம்.” என்று டெல்லி கல்வி அமைச்சர் அதிஷி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிஷி, “எனது நெருங்கிய உதவியாளர் ஒருவர் மூலம், எனது அரசியல் வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால், பாஜகவில் சேர வேண்டும் என்று அக்கட்சி என்னை அணுகியது. மேலும் நான் பாஜகவில் சேரவில்லை என்றால், வரும் மாதத்தில், நான் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படுவேன் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி ஆம் ஆத்மியை அச்சுறுத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது. அவர்களை கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் அரவிந்த் கேஜ்ரிவாலின் வீரர்கள், பகத்சிங்கின் உதவியாளர்கள்.

அரசியலமைப்பைக் காப்பாற்ற நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். அரவிந்த் கேஜ்ரிவாலின் தலைமையில் மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்க பாடுபடுவோம் என்பதை பாஜகவுக்கு நான் கூற விரும்புகிறேன்.

நான் உட்பட ஆம் ஆத்மியின் மேலும் சில தலைவர்கள் குறிப்பாக, சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக், ராகவ் சதா உள்ளிட்டோர் தேர்தலுக்கு முன் கைது செய்யப்படலாம்.

அரவிந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் சிறையில் இருந்தும் ஆம் ஆத்மி கட்சி இன்னும் ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருப்பதை பாஜக உணர்ந்துள்ளது. இதையடுத்தே, தற்போது ஆம் ஆத்மி கட்சியின் அடுத்தகட்ட தலைவர்களை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.” என்று தெரிவித்தார்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.