`கொலை மிரட்டல் விடுத்தாரா? சரண்யா பொன்வண்ணன்' – உண்மையில் நடந்தது இதுதான்…

தமிழ் சினிமாவின் பாசக்கார; சென்டிமென்ட் தாயாக இருப்பவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இந்நிலையில் சரண்யா பொன்வண்ணன் மீதுதான் கொலைமிரட்டல் புகார் எழுந்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமா காட்சிகளில்கூட அவ்வளவு சீக்கிரம் கோபப்படாத சாஃப்ட்டான சரண்யா கொலைமிரட்டல் விடுக்கும் அளவுக்குப் போனாரா? புகார் கொடுத்த பக்கத்து வீட்டு பெண்மணிக்கும் சரண்யா பொன்வண்ணனுக்கும் இடையே நடந்தது என்ன? விசாரித்தபோதுதான், இரு தரப்பிலும் நடந்த உண்மைத் தகவல்கள் கிடைத்தன.

‘நாயகன்’ படத்தின் மூலம் பிரபலமாகி பல்வேறு படங்களில் நடித்துத் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தர் சரண்யா பொன்வண்ணன். இவரின், கணவர் நடிகர், இயக்குனருமான பொன்வண்ணன். சென்னை விருகம்பாக்கத்திலுள்ள பத்மாவதி நகரில் மகள்களுடன் வசித்துவருகிறார்கள். பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஸ்ரீதேவி என்பவர் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், காரை எடுப்பதற்காக தனது வீட்டின் கேட்டை திறந்தபோது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த நடிகை சரண்யாவின் காரை இடிப்பதுபோல் சென்றதாகவும் இதனால், கோபப்பட்ட சரண்யா மற்றும் அவரின் குடும்பத்தினர் தங்களது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தங்களுக்கும் தங்களது வீட்டினருக்கும் கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

சரண்யா பொன்வண்ணன்

இது தொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்திவருவதாகவும் பரபரப்பாகி வரும் சூழலில், என்ன நடந்தது? என புகாரை விசாரித்து வரும் விருகம்பாக்கம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணனிடமும் விசாரித்தோம்,

“ஸ்ரீதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில சரண்யா பொன்வண்ணன் குடும்பத்தினரிடம் காவல்துறை தரப்பில் விசாரணை நடத்தினோம். சரண்யா பொன்வண்ணன் வீட்டிற்கு வரக்கூடியவர்களுக்கு ஸ்ரீதேவி குடும்பத்தார் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததாகக் குற்றம்சாட்டினர். மார்ச் 31-ஆம் தேதி சரண்யா பொன்வண்ணனின் மகளும் உறவினரும் வந்து காரை நிறுத்தியிருக்காங்க. அப்போது, ஸ்ரீதேவியின் கணவர் வேண்டுமென்றே அவர் வீட்டு கேட்-ஐ வேகமாக திறந்து காரை இடித்துள்ளார். ஏங்க இப்படி பன்றீங்கன்னு சரண்யா மகளுடன் வந்த உறவினர் கேட்டுள்ளார். என் வீட்டு கேட்… நான் அப்படித்தான், திறப்பேன்னு கோபமாகச் சொல்லியிருக்கிறார்.

விருகம்பாக்கம் காவல்நிலையம்

அப்போது, அவரின் மகனும் வெளியில் வர இருவருக்கும் வாக்குவாதம் ஆகிக்கொண்டே இருக்கும்போது, திடீரென்று உள்ளிருந்து வந்த ஸ்ரீதேவி ‘டேய் அப்படிதான் இடிப்பேண்டா’என மரியாதை இல்லாமல் பேசியிருக்கிறார். என்னங்க மரியாதை பேசிக்கிட்டிருக்கும்போது வாடா போடான்னு பேசுறீங்க என சரண்யாவின் உறவினருக்கும் ஸ்ரீதேவியின் குடும்பத்தினருக்கும் கடுமையான வாக்குவாதமாக மாறிடுச்சு.

ஸ்ரீதேவி ரொம்ப அசிங்கமான வார்த்தைகளால பேசியிருக்காங்க. உறவினரும் கோவத்துல பதிலுக்கு பேசியிருக்காரு. வெளியில ஏதோ சத்தம் கேட்குதேன்னு பொன்வண்ணனும் சரண்யாவும் வெளியில் ஓடிவந்து பார்த்திருக்காங்க. “எப்போப்பார்த்தாலும் ஏன் இப்படி பிரச்சனை பண்ணிக்கிட்டே இருக்கீங்க”ன்னு பதிலுக்கு பொன்வண்ணனும் சரண்யாவும் பேசிவிட்டு, மகளையும் உறவினரையும் அழைத்துக்கொண்டு உள்ளே போயிருக்காங்க.

சரண்யா பொன்வண்ணன்

உடனே, வாக்குவாதத்துல ஈடுபட்ட சி.சி.டி.வி காட்சிகளை எடுத்து, சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுத்ததா புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்திட்டாங்க. புகார் கொடுத்த ஸ்ரீதேவியும் அவரது கணவரும் இந்த குடியிருப்பில் சரண்யா பொன்வண்ணனிடம் மட்டுமல்ல, மற்ற குடியிருப்புவாசிகளிடமும் ஏதாவது பிரச்சனையை செய்துகொண்டே இருப்பார்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தப்பு உங்க மேல இருக்குன்னு எச்சரிச்சு அனுப்பியிருக்கோம். உண்மையில் நடந்தது இதுதான். அதேமாதிரி சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுத்தார் என்பதெல்லாம் அப்பட்டமான பொய்” என்றார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.