நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல் 1) மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 125 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி 127 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரியான் பராக் 54 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி இருந்தார். மும்பை அணியில் அதிகபட்சமாக 34 ரன்களை ஹர்திக் பாண்டியா எடுத்திருந்தார். இந்த சீசனில் இதுவரை ஆடிய அனைத்து போட்டிகளிலும் மும்பை அணி தோல்வியைச் சந்தித்திருக்கிறது.
மும்பை அணிக்காக ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித்திடம் இருந்து கேப்டன்ஷிப் பதவியை ஹர்திக் பாண்டியாவிற்குக் கொடுத்தது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களும் இதற்கு எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி மீண்டும் ரோஹித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற போட்டியின்போது ஹர்திக், ரோஹித் சர்மாவை நடத்திய விதம் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. பலரும் ரோஹித்திற்கு ஆதரவாகக் கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளில் ஹர்திக்கிற்கு எதிராக ரசிகர்கள் முழக்கமிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்றைய ஆட்டத்திலும் மும்பை அணி பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது ஹர்திக்கிற்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டு இருந்திருக்கின்றனர். அப்போது பீல்டிங்கில் நின்றிருந்த ரோஹித் சர்மா, ரசிகர்களைப் பார்த்து ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராகச் சத்தமிடாதீர்கள் எனக் கையசைத்து கோரிக்கை வைத்திருக்கிறார்.
ரசிகர்கள் அமைதியாகும் வரை தொடர்ந்து இரண்டு, மூன்று முறை கையசைத்து கோரிக்கை வைத்த ரோஹித் சர்மாவின் செயல் இதயங்களை வென்றிருக்கிறது. ரோஹித்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.