தோட்ட மக்களுக்கான காணி உரிமைகளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2024வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஊடாக தோட்டப் பகுதி மக்களுக்கு காணி உரிமைகளை வழங்குதல் குறித்த யோசனை நிதிப் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைக்கான அமைச்சராக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டது.
இவ்யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அந்தஸ்தற்ற இராஜாங்க பெருந்தோட்டக் கைத்தொழில் மறுசீரமைப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் பெருந்தோட்ட வலயம் என்பவற்றுக்கான புதிய கிராமிய அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்த வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேச பெருந்தோட்டக் கம்பனிகள் மற்றும் அரசிற்குத் சொந்தமான பெருந்தோட்டக் கம்பனிகளின் தோட்டங்களில் வாழும் 4151 பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், அக்குடும்பங்கள் தற்போது நிரந்தரமாக வாழும் காணிகளுக்கான அளிப்பு உறுதிகளை வழங்குவதற்காக ஜனாதிபதி மற்றும் நீர்வளங்கள், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.