விஜய்யின் 68வது படமான `தி கிரேஸ்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படப்பிடிப்பு வெளிநாட்டில் மும்முரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து இப்போது வெளிநாடு பறந்திருக்கிறது டீம்.
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி வருகிறது இந்த ‘தி கிரேஸ்டஸ்ட் ஆஃல் டைம்’. இந்தப் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பதை அவர்களே அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டனர். மல்டி ஸ்டார்களின் கூட்டணியாக உருவாகி வரும் இந்தப் படத்தில் மீனாட்சி சௌத்ரி, பிரபுதேவா, மோகன், ஜெயராம், பிரசாந்த், சினேகா, லைலா, த்ரிஷா (கெஸ்ட் ரோல்), பார்வதி நாயர், அஜ்மல், கஞ்சா கருப்பு, யோகி பாபு எனப் பலரும் நடித்து வருகிறார்கள். யுவன் ஷங்கர் ராஜ இசையமைத்து வருகிறார்.
இதன் பாடல்கள் சமீபத்தில்தான் சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் அரங்கம் அமைத்து படமாக்கினார்கள். அதன்பின், திருவனந்தபுரம் பறந்தது யூனிட். இந்தப் படத்தின் இளவயது விஜய்யின் தோற்றமும் சில ஃப்ளாஷ்பேக் காட்சிகளும் அங்கே படமாக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். படத்தில் த்ரிஷா ஒரு பாடலுக்கு வருகிறார் என்றும் கேங்ஸ்டர் குரூப்பில் கேமியோ ரோலிலும் நடித்துள்ளார் என்கிறார்கள். அந்தப் பாடலையும் சென்னையிலேயே ஷூட் செய்து முடித்திருக்கிறார்கள். மோகன், சினேகா இவர்களது காட்சிகள் ஏற்கெனவே ஷூட் செய்யப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள்.
கேரளா ஷூட்டை முடித்த கையோடு இப்போது பஹ்ரைன் பறந்திருக்கிறது டீம். இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் அங்கே கிளம்பிப் போனார் விஜய். ஆனால், படத்தின் இயக்குநர், ஹீரோயின் உட்படப் பலரும் அதற்கு முன்னரே புறப்பட்டுச் சென்றுவிட்டனர். அங்கே சில ஆக்ஷன் சீக்குவென்ஸ்கள் படமாகப்படுகின்றன. வரும் தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக படத்தின் டீசர் துளிகள் அல்லது முதல் சிங்கிள் லிரிக் வீடியோ ஆகியவற்றில் எதாவது ஒன்றை வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர்.
அன்றே, ‘தளபதி 69’ படத்தின் இயக்குநரையும் விஜய் அறிவித்துவிடுவார் என்ற பேச்சும் இருக்கிறது. மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்த பின்னர், இளவயது விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அங்கே டீ-ஏஜிங் டெக்னாலஜிக்கான வேலைகள் இருக்கும் என்கிறார்கள்.
வரும் ஏப்ரல் 14க்கு முன்னரே வெளிநாட்டிலிருந்து படப்பிடிப்பை முடித்துவிட்டு மொத்த டீமும் சென்னை திரும்பிவிடுகிறார்கள் என்றும், தேர்தல் சமயத்தில் விஜய் சென்னையில் இருப்பார் என்றும் சொல்கிறார்கள்.