திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் கருப்பையாவை ஆதரித்து, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் நகர செயலாளர்கள் மற்றும் வட்டச் செயலாளர்களின் கூட்டம், புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள அ.தி.மு.க தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,
“நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் கருப்பையாவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதுக்கோட்டை நகரில் உள்ள வடக்கு, தெற்கு ஆகிய இரண்டு நகரங்களிலும் யார் தி.மு.க கூட்டணி வேட்பாளரை விட ஒரு வாக்கு அதிகம் பெற்று தருகிறார்களோ, அவர்களுக்கு இனோவா கார் என் சார்பில் வழங்கப்படும். அதேபோல், அ.தி.மு.க வட்டச் செயலாளர்கள் தி.மு.க கூட்டணி வேட்பாளரை விட ஒரு வாக்கு அதிகம் பெற்று கொடுத்தால்கூட அவர்களுக்கு 5 சவரன் தங்கச் சங்கிலி வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
அதோடு, “பிரசாரத்தில் ஈடுபடக்கூடிய அ.தி.மு.க நிர்வாகிகள் வெயிலில் சென்று வாக்குகளை சேகரிக்காமல் வெயில் இல்லாத நேரத்தில் வீடு வீடாகச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரிக்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்தார். சி.விஐயபாஸ்கரின் இந்த அறிவிப்பு, புதுக்கோட்டை அ.தி.மு.க-வினரை உற்சாகமடைய வைத்துள்ளது.