புதுடெல்லி: ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியின் முக்கியத் தலைவர் வி.கே.பாண்டியன் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. இது, அக்கட்சிக்கு பாஜகவுடன் கூட்டணி உருவாகாமல் போனது காரணமாகக் கருதப்படுகிறது.
ஒடிசா மாநிலத்தை கடந்த 2000 ஆண்டு முதல் ஆட்சி செய்யும் பிராந்தியக் கட்சி பிஜேடி. இதன் தலைவரான நவீன் பட்நாயக்(77) அதன் மாநில முதல்வராக ஐந்தாவது முறையாக தொடர்கிறார். தன் கூட்டணிக் கட்சியாக கடந்த 1998 முதல் இருந்த பாஜகவிடமிருந்து பிஜேடி 2009-ல் விலகி விட்டது.
எனினும், தொடர்ந்து பல்வேறு முக்கிய பிரச்சினைகளில் நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு பிஜேடி ஆதரவளித்து வந்தது. இச்சூழலில், சுமார் 24ஆண்டுகளுக்கு பின் பாஜகவுடன் கூட்டணி வைக்க பிஜேடி மீண்டும் தயாரானது. எனினும், இக்கூட்டணி தொகுதிப் பங்கீடு பிரச்சினையால் ஈடேறாமல் போனது.
இந்த உறவின் பின்னணியில், ஒடிசாவை சேர்ந்த மத்திய ரயில் அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் ஒடிசாவில் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் வி.கே.பாண்டியனும் இருந்தனர்.
மதுரையை சேர்ந்த தமிழரான வி.கே.பாண்டியன், 2000 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரி. இவருக்கு முதல்வர் நவீனுடன் நிலவிய நெருக்கத்தை எதிர்த்து பிஜேடியிலிருந்து விலகிய தலைவர்களும் உண்டு. சில மாதங்களுக்கு முன் தனது ஐஏஎஸ் பணியிலிருந்து கட்டாய ஓய்வுபெற்ற பாண்டியன், பிஜேடியில் அதிகாரபூர்வமாக இணைந்தார்.
இதன் காரணமாக, ஒடிஸா முதல்வரான பிஜு பட்நாயக்கிற்கு இணையாக பாண்டியனும் தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில், திடீர் என பாண்டியன் இடம்பெற்ற சுவரொட்டிகள் ஒடிசாவில் காணாமல் போகத் துவங்கி விட்டன. இதற்கு வேறு எந்த கட்சியும் காரணம் அல்ல, பிஜேடியே முன்வந்து அச்சுவரொட்டிகளை விலக்கி உள்ளனர்.
இதை ஒப்புக்கொண்ட பிஜேடியின் செய்தி தொடர்பாளர் பிரியபரதா மஜிஹி கூறும்போது, “எங்கள் கட்சியின் சில வேட்பாளர்கள் தம் சுவரொட்டிகளில் பாண்டியனின் படங்களை அகற்றி இருக்கலாம். ஆனால், அவர் இன்னும் பிஜேடியில் முதல்வர் நவீனுக்கு பிறகு செல்வாக்கு பெற்ற தலைவராகவே உள்ளார்” எனத் தெரிவித்தார்.
இதன் பின்னணியில் வேறுபல காரணங்களும் வெளியாகத் துவங்கி உள்ளன. பாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தில் ‘ஒடியாவின் அடையாளம்’ என மண்ணின் மைந்தர் விவகாரத்தை எழுப்பத் திட்டமிட்டுள்ளது.
இதில், தமிழகத்தை சேர்ந்த பாண்டியனின் ஒடிசா அரசியல் குறித்தும் பாஜக கேள்வி எழுப்பும் அச்சம் பிஜேடிக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தமிழரான பாண்டியன் சுவரொட்டிகள் அகற்றப்படுவதாகக் கருதப்படுகிறது.
ஒடிசாவின் 21 மக்களவை தொகுதிகளுடன் 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் இணைந்து நடைபெறுகிறது. இதற்கான வேட்பாளர்கள் ஆளும் கட்சியான பிஜேடி மற்றும் பாஜக ஆகிய இருவருமே தனது வேட்பாளர்களை முழுமையாக அறிவிக்கவில்லை.