விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு போன்றக் குற்றச்சாட்டுகளுடன், `பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஜனநாயகமே இருக்காது, அரசியலமைப்பு சட்டத்தையே அவர்கள் மாற்றிவிடுவார்கள், இஸ்லாமியர்களின் குடியுரிமை பறிக்கப்படும்’ என்று இந்தியா கூட்டணி பிரசாரம் செய்துவருகிறது. மறுபக்கம், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் பா.ஜ.க, `ஊழலை ஒழிக்க இந்தியா கூட்டணியை வீழ்த்த வேண்டும்’ என்று கூறிவருகிறது.
இத்தகைய சூழலில், கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி நடத்திய பேரணியில் பேசிய ராகுல் காந்தி, `மேட்ச் பிஃக்ஸிங் மூலம் பா.ஜ.க வெற்றி பெற்று மீண்டும் அரசியலமைப்பை மாற்றும்போது நாடே தீக்கிரையாக்கப்படும்’ என்று கூறியிருந்தார். இந்த நிலையில், ராகுலின் விமர்சனத்துக்குப் பதில் விமர்சனம் செய்திருக்கும் மோடி, இந்த 10 ஆண்டுகளில் நடந்தது வெறும் டிரெய்லர் தான் என்று தெரிவித்திருக்கிறார்.
ராஜஸ்தானின் கோட்புட்லியில் இன்று நடைபெற்ற பேரணியில் பேசிய மோடி, “இந்த 10 ஆண்டுகளில் நிறைய நடந்திருக்க வேண்டும். இருந்தாலும், நடந்தவையெல்லாம் வெறும் டிரெய்லர் மட்டும்தான். ஊழலை ஒழிக்க வேண்டும். காங்கிரஸும், இந்தியா கூட்டணியும் நாட்டுக்காகப் போட்டியிடவில்லை. தங்களின் சுயநலத்துக்காகப் போட்டியிடுகிறார்கள். ஊழலைக் காப்பாற்றுங்கள் என்று அவர்கள் கூச்சலிடுகிறார்கள். தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று பேசாமல், பா.ஜ.க வெற்றி பெற்றால் நாடே தீப்பற்றி எரியும் என காங்கிரஸ் தலைவர்கள் மிரட்டும் முதல் தேர்தல் இது.
இந்தத் தேர்தலில் நாட்டின் அரசியல் இரு அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. ஒருபக்கம் தேசத்தின் நலனை முன்னிறுத்தும் பா.ஜ.க, மறுபக்கம் கொள்ளையடிக்க வாய்ப்பு தேடும் காங்கிரஸ். இன்று நாட்டில் எந்த பிரச்னையாக இருந்தாலும் அதற்கு மூலகாரணம் காங்கிரஸ் தான். சுதந்திரத்துக்குப் பிறகு, காங்கிரஸால் நாட்டில் ஏழாண்டுகள் வறுமை இருந்தது. இந்த தேர்தலில்,பா.ஜ.க வெற்றி பெற்றால், நாடு சுடுகாடாகிவிடும் என காங்கிரஸ் மிரட்டுகிறது. ஆனால், காங்கிரஸ் கொளுத்திய நெருப்பைத்தான் இந்த 10 ஆண்டுகளாக உங்களின் மோடி அணைத்துவருகிறார். இப்போது, வலுவான மற்றும் உறுதியான பா.ஜ.க ஆட்சிக்கான தேவை மேலும் அதிகரித்திருக்கிறது” என்று கூறினார்.