மதுரை: தென் மாவட்டங்களில் போட்டியிடும் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய அமைச்சர் அமித் ஷா தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இதையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகளை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தென் மாவட்டங்களில் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் பாஜகவும், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரத்தில் தங்களது கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். இவர்களை ஆதரித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமான மூலம் ஏப்ரல் 4-ம் தேதி மதுரை வருகிறார்.
தேனி, ராமநாதபுரம், சிவகங்கை பகுதியில் சாலை மார்க்கமாக சென்று ஆதரவு திரட்டும் அவர், மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். இக்கூட்டத்தில் தென்மாவட்ட பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
மத்திய அமைச்சரின் வருகையையொட்டி பாதுகாப்பு முன்னேற்பாடுகளும், பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து காவல் துறையினர் தரப்பில் கூறுகையில், “தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏப்ரல் 4, 5-ஆம் தேதி என 2 நாள் பயணமாக தென் மாவட்டங்களுக்கு வருகிறார். இதையொட்டி, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் மதுரை மாநகர ஐஜி ஜெ.லோகநாதன், டிஐஜி ரம்யா பாரதி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்கின்றனர்.
தேனி, ராமநாதபுரம், சிவகங்கை போன்ற இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். பொதுக் கூட்டம் நடக்கும் பழங்காநத்தம் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் ஈடுபடுத்தப்பவர்.
மத்திய அமைச்சரின் வருகையால் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் நாளை மதுரை வருகின்றனர். அவர்கள் பாதுகாப்பு குறித்து உள்ளூர் காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை செய்கின்றனர். இதன்படி, பொதுக்கூட்டம், அவரது வழித்தடங்களிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் தேவைகேற்ப போக்குவரத்து மாற்றமும் மேற்கொள்ளப்படும். இருப்பினும், மத்திய அமைச்சரின் பயணத் திட்டம் குறித்து முழு விவரம் நாளை தெரியும்” என்றனர்.