புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் உள்ள 17 தனித் தொகுதிகள் இந்தமுறை யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. இவற்றை ஆளும் பாஜக, எதிர்கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் குறி வைத்துள்ளன.
எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 17 தனித் தொகுதிகள் உ.பி.யில் உள்ளன. ஆனால், இங்குள்ள தலித் வாக்காளர்கள் ஆதரவுக் கட்சியாக இருந்தும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியால்(பிஎஸ்பி) அந்த தொகுதிகளில் தனது வெற்றியை நிலைநாட்ட முடியவில்லை.
கடந்த 2014 மக்களவைத் தேர்தல் முதல் பாஜக இந்த தனித் தொகுதிகளில் செல்வாக்கை வேகமாக வளர்த்து வருகிறது. கடந்த 2019 தேர்தலில் பிஎஸ்பி நாகினா மற்றும் லால்கன்ச் ஆகிய இரண்டு தனித் தொகுதிகளை மட்டுமே வென்றது. இதற்கு அதனுடன் கூட்டணியாகப் போட்டியிட்ட அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதியும் காரணமானது. மீதம் உள்ள 15 தனித் தொகுதிகளும் பாஜக வசம் சென்றன. 2014 மக்களவை தேர்தலில் இந்த 17 தொகுதிகளிலும் பாஜகவே வெற்றி பெற்றது. 2004 மக்களவையில் பாஜகவுக்கு 3 தனித் தொகுதிகளில் மட்டும் வெற்றி கிடைத்தன. பிஎஸ்பி 5 மற்றும் சமாஜ்வாதி 7 தனித் தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
எனினும், சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள அதன் 86 தனித் தொகுதிகளில் அதிகம் பெறும் கட்சிகளே ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பெறுகின்றன. தனி மெஜாரிட்டியுடன் 2007 இல் ஆட்சி அமைத்த பிஎஸ்பி, சட்டப்பேரவையின் 86 தனித்தொகுதிகளில் 61 ஐ தன்வசமாக்கியது.
அடுத்து 2012 இல் அகிலேஷின் சமாஜ்வாதி 58 தனித் தொகுதிகளில் வென்றது. பாஜக, 2017 இல் 71, 2022 இல் 65 தனித் தொகுதிகளை சட்டப்பேரவையில் வென்று ஆட்சி அமைத்தது. உபி மாநிலத்தில் சுமார் 29 சதவீதம் தலித் வாக்காளர்கள் உள்ளனர். இதன் காரணமாக, உபியில் அமையும் ஆட்சிகளின் வெற்றியில் தலித்துகளின் பங்கு முக்கியமாக உள்ளது.
எனவே, சமாஜ்வாதியின் கட்சிக் கொள்கையான பிடிஏவில் (பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர்), தலித்துகளுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளது. உபியில் ஆளும் பாஜக தனது அமைச்சரவையில் 8 தலித்துகளை உறுப்பினர்களாக்கி உள்ளது. மக்களவை தேர்தலில் இந்த தனித் தொகுதிகளை வெல்ல, அச்சமூகத்தின் தன் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களை அதன் பிரச்சாரங்களில் அமர்த்தி உள்ளது.
பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்த பீம் ஆர்மி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்திற்கு சமீபத்தில் ‘ஒய்’ பாதுகாப்பை மத்திய அரசு அளித்துள்ளது. தேர்தல் துவங்கும் வரை சமாஜ்வாதியின் நட்புறவில் இருந்த ஆசாத், உ.பி.யின் நாகினா தனித் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார்.-