கரூர்: தமிழக உரிமைகளை பறித்தது பாஜக, துணை போனது அதிமுக என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். கரூர் உழவர் சந்தை எதிரில் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் தெரிவித்தது.. “மத்திய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் மக்களுக்கு என்ன செய்தது. தமிழகத்துக்கு என்ன செய்தது. திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டு கரோனா மற்றும் பொருளாதார நெருக்கடி. இருந்தும் திமுக அரசு கொடுத்த 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியது.
மோடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். மோடி ஆட்சியில் அம்பானி, அதானி தான் பலனடைந்துள்ளனர். நண்பர்களுக்காக மட்டுமே ஆட்சி நடத்துகிறார் மோடி. ஊழலை பற்றி பேச இந்த அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது. சிஏஜி அறிக்கையில் ரூ.7.5 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. ஆயுஷ் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. 1 கிலோமீட்டர் சாலை அமைக்க ரூ.250 கோடி செலவிடுகிறது.
தமிழகத்தின் உரிமைகளை பறித்ததது பாஜக. அதற்கு துணை போனது அதிமுக. இந்த ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும். இந்த பாசிச மோடி ஆட்சியை அகற்ற வேண்டும். மோடி அரசை தூக்கி எறிய வேண்டும்.
அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க தமிழகத்தின் உரிமைகளை மீட்க, நேர்மையான ஆட்சி அமைய காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள். கரூர் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று கின்னஸ் சாதனை படைக்க வேண்டும்” என்றார்.
வேட்பாளர் ஜோதிமணி வாக்கு கேட்டு சிறப்புரையாற்றினார். கரூர் மாவட்ட பொறுப்பாளர் எம்.எம்.அப்துல்லா, எம்எல்ஏக்கள் ரா.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, மண்டலக்குழுத் தலைவர்கள் எஸ்.பி.கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.