Doctor Vikatan: தினமும் காலையில் வயிற்றுப்போக்கு… பிரச்னையின் அறிகுறியா… சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: நான் 40 வயதுப் பெண். எனக்கு தினமும் காலையில் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், அதுதான் அலாரம் வைத்ததுபோல என்னை தினமும் எழுப்பிவிடுகிறது என்றே சொல்லலாம். அவசரமாக கழிவறைக்கு விரைய வேண்டியிருக்கிறது. இது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா…. இதற்கு சிகிச்சை எடுக்க வேண்டுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்   

மருத்துவர் ஸ்பூர்த்தி அருண்

40 வயதில் வயிறு சம்பந்தமான வேறு பிரச்னைகள் ஏதும் இல்லை என்ற பட்சத்திலும், மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறவில்லை என்ற பட்சத்திலும், இந்தப் பிரச்னையின் பின்னணியில் லாக்டோஸ் இன்டாலரென்ஸ் (Lactose intolerance  ) எனப்படும் பால் பொருள்கள் ஒவ்வாமை காரணமாக இருக்கலாம். 

நம்மில் பலருக்கும் லாக்டோஸ் இன்டாலரென்ஸ் பிரச்னை இருக்கிறது. ஆனால், அப்படியொரு பிரச்னை இருப்பதையே பலரும் உணர்வதில்லை. ஏனெனில், நம்மில் பலரும் பால், தயிர் சாப்பிட்டுதான் வளர்ந்திருப்போம். இந்தப் பிரச்னைக்கு முதல் தீர்வு, 2 முதல் 3 வாரங்களுக்கு பால் தொடர்பான எந்த உணவுகளையும் எடுக்காமல் தவிர்ப்பதுதான்.  இதற்கு ‘எலிமினேஷன் டயட்’ (elimination diet) என்று பெயர்.  

பால் பொருள்கள்

புரோட்டீன் பார்கள் உள்பட பல உணவுகளிலும் வே, கேசின் போன்ற பால் பொருள்கள் சேர்க்கப்பட்டிருக்கும். அவற்றையும் கவனமாகத் தவிர்க்க வேண்டும்.  குறைந்தது 3 வாரங்களுக்கு இப்படி பால் உணவுகளை அறவே தவிர்த்துப் பார்த்து, இந்தப் பிரச்னை சரியாகிறதா என்று கவனியுங்கள். அப்படி பால் உணவுகளைத் தவிர்த்ததன் விளைவாக உங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்தால், உங்களுக்கு ‘லாக்டோஸ் இன்டாலரென்ஸ்’ பாதிப்பு இருப்பதை உறுதிசெய்யலாம்.

செயற்கை இனிப்புகள், ப்ரிசர்வேட்டிவ் சேர்த்த உணவுகள் சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு உண்டா என்பதையும் பாருங்கள். அவையும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம். சில சமயங்களில் பழங்களை அதிகம் சாப்பிடுவதால், அவற்றிலுள்ள சர்க்கரைச் சத்தும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம்.  இவை தவிர, மருத்துவரீதியான காரணங்கள் என்றால் ஐபிஎஸ் எனப்படும் ‘இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்’ (Irritable bowel syndrome  ) உள்ளிட்டவையும் இந்தப் பிரச்னைக்கு காரணமாக இருக்கக்கூடும். 

பழங்கள்

உங்கள் கேள்வியை வைத்து, உங்களுக்கு மருத்துவ ரீதியான பிரச்னைகள் ஏதும் இல்லை என்ற யூகத்துடன், வாழ்வியல் மாற்றங்களால் வயிற்றுப்போக்கு பிரச்னை ஏற்பட்டதாக இதை அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். அந்த அடிப்படையில், அதற்கேற்ற தீர்வுகளையும் சொல்கிறேன்.

முதல் வேலையாக, நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகப்படுத்துங்கள். எடுத்ததுமே அளவுக்கதிக நார்ச்சத்து உணவுகளை எடுத்தால் வயிற்று உப்புசம் வரலாம் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாகவே அதை அதிகரிக்க வேண்டும்.

Fibrerich foods

இயற்கையான முறையில் நார்ச்சத்தை அதிகரிக்க, காய்கறிகள், அதிக இனிப்பில்லாத பழங்கள், கீரைகள், முழுத்தானியங்கள், சியா விதைகள், ஆளி விதைகள் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளலாம்.  நார்ச்சத்துள்ள உணவுப்பழக்கம் குடல் இயக்கத்தைச் சீராக்கும். உங்களுக்கு அசிடிட்டி பிரச்னை இருக்கிறதா என்றும் பாருங்கள். அதுவும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம். வேறு ஏதேனும் பிரச்னைகளுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்கிறீர்களா என்று தெரியவில்லை. அதன் விளைவாகவும் இந்தப் பிரச்னை இருக்கலாம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.