`உதயநிதிக்கு முன்னுரிமை; கனிமொழியை தூத்துக்குடிக்குள்ளேயே சுருக்கி வைத்திருக்கிறார்கள்!' – விந்தியா

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டிடும் அ.தி.மு.க வேட்பாளர்  சிவசாமி வேலுமணியை ஆதரித்து அ.தி.முக-வின் நட்சத்திரப் பேச்சாளரும், நடிகையுமான விந்தியா தூத்துக்குடியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “எவ்வளவு மலிவாக துணி வாங்கினாலும் தண்ணீரில் போட்டால்தான் சாயம் போகும். ஆனால், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், கமல்ஹாசன் தண்ணீர் படாமலே சாயம் போவார். அவர் கட்சி தொடங்கும் போது தி.மு.க-வை எதிர்ப்பதாகக் கூறினார். ஆனால், இப்போது நிலைமை என்னவாக உள்ளது. அதே தி.மு.க-வுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார். 

திரண்டிருந்த மக்கள்

இதே போன்று இன்னொரு நபர் அந்தக்  கூட்டணியில் உள்ளார், அவர்தான் வைகோ. அவர் வாரிசு அரசியலை எதிர்த்து தி.மு.க கட்சியிலிருந்து விலகி, ம.தி.மு.க எனும் கட்சியைத் தொடங்கினார். ஆனால், அவரும் மகனின் சீட்டுக்காக தி.மு.க-வுடன் ஐக்கியமாகிவிட்டார். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எத்தனையோ பொய் வாக்குறுதிகளை தி.மு.க அள்ளி வீசி, தமிழக மக்களை ஏமாற்றி தமிழ்நாட்டில் போட்டியிட்ட தி.மு.க மற்றும் அதன் கூட்டணியைச் சேந்ர்த அத்தனை வேட்பாளர்களும் ஜெயித்தார்கள்.

தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி ஜெயித்தார். ஆனால், கடந்த 5 வருடத்தில் சொல்லிக் கொள்ளும்படி பெரிய திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறாரா… கனிமொழியின் பிரசாரத்தை டி.வி-யில் பார்த்தேன். அவர் ஏதோ எதிர்க்கட்சி எம்.பி மாதிரியும், இந்த தொகுதியில் நாங்கள் வெற்றி பெற்றால் எல்லாவற்றையும் சரி செய்வோம் என்பதுபோலவும் பேசுகிறார். கடந்த மூன்று வருடமாக தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி தானே நடந்து கொண்டிருந்தது.

நடிகை விந்தியா

நீங்கள்தானே 5 வருடமாக இந்த தொகுதிக்கு எம்.பி-யாக இருக்கிறீர்கள். அப்போது நீங்கள் அந்த சமயத்தில் மக்களுக்கு நல்லது பண்ணியிருக்கலாமே ஏன் பண்ணவில்லை?  தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு தள்ளாடிக் கொண்டு இருக்கிறது. கனிமொழி முன்னாள் முதல்வர், தி.மு.க-வின் தலைவர் கருணாநிதியின் மகள். ஆனால் கனிமொழியை ஏதோ ஒரு சாதிய தலைவர்போல தூத்துக்குடிக்குள் மட்டுமே சுருக்கி வைத்திருக்கிறார்கள். ஆட்சியிலும், கட்சியிலும்  முக்கியத்துவம் பெற்றுவிடக் கூடாது என தள்ளி வைத்திருக்கிறார்கள்.

அப்போதுதான் ஒண்ணுமே தெரியாத உதயநிதிக்கு  மகுடம் சூட்ட முடியும். தி.மு.க-வின் தலைமை பதவிக்கு கருணாநிதி குடும்பத்தைதான் நம்பி இருப்பார்கள், அந்த அப்பாவி தொண்டர்கள். கருணாநிதிக்கு பின் கருணாநிதியின் மகன் ஸ்டாலின் தலைவராக இருக்கிறார். அவருக்கு பிறகு கருணாநிதி மடியில் வளர்ந்த கனிமொழிதானே தலைவராக வர வேண்டும்.

திரண்டிருந்த மக்கள்

ஆனால், உதயநிதியை ஏன் முன்னிலைப்படுத்துகிறார்கள். கனிமொழி, கனிமொழிக்காகவாவதுகூட கேள்வி கேட்பதில்லை. இதிலேயே தன் உரிமையைக்கூட கேட்காதவர், மக்கள் உரிமையை கேட்பாரா… சுயநலத்திற்காக சொந்த லாபத்திற்காக எம்.பி-யாக வேண்டும் என்று நினைக்கிறாரேதவிர, தூத்துக்குடி மக்கள் மேல் அவருக்கு எந்த அக்கறையும் கனிவும் கிடையாது.” என்றார்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.