டக்குனு வந்துவிட்டது 5.5ஜி… 5ஜி சேவைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

Difference Between 5G And 5GA Network: இந்தியாவில் இணைய சேவை பயன்பாடு என்பது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் அதிகமாகி உள்ளது எனலாம். தொழில்நுட்ப வளர்ச்சியால் ஸ்மார்ட்போன் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பு மக்களிடம் சென்றடைந்துள்ளது. வர்க்க ரீதியிலும், சமூக ரீதியிலும் பல தரப்பு மக்களிடம் ஸ்மார்ட்போன் பெரும் தாக்கத்தை செலுத்துகிறது. 

வாட்ஸ்அப், யூ-ட்யூப் உள்ளிட்ட செயலிகளின் பயன்பாடு அதிகம் இருப்பதால், டேட்டாக்களும் மக்களால் அதிகம் செலவிடப்படுகிறது எனலாம். கடந்தாண்டு வெளியான ஒரு அறிக்கையின்படி, இந்தியர்கள் ஒரு மாதத்தில் சராசரியாக 20ஜிபி டேட்டாவை பயன்படுத்துவதாக தெரிகிறது. 2027ஆம் ஆண்டில் ஒருவர் 46ஜிபி டேட்டாவை பயன்படுத்துவார் என கணக்கிடப்படுகிறது. மேலும், வீடியோக்கள் பார்ப்பது, வீடியோக்களை உருவாக்குவது இந்தியாவில் அதிகமாகியிருப்பதால் டேட்டா பயன்பாடும் அதிகமாகியிருப்பதாக கூறப்படுகிறது. 

இந்தியாவில் 5ஜி சேவை

இந்தியாவில் தற்போது 4ஜி பலராலும் பயன்படுத்தப்பட்டாலும் 5ஜி சேவையும் அதிகமாகி வருகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியாவில் தற்போது 5ஜி சேவையை வரம்பற்ற வகையில் வழங்கி வருகின்றன. 5ஜி சேவையை பயன்படுத்த 5ஜி ஸ்மார்ட்போன்களும் அதிகம் சந்தையில் வருகின்றன. அனைத்து நிறுவனங்களும் தற்போது 5ஜி சேவைக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகின்றன. மேலும், அனைத்து விலை வகையிலும் மொபைல்களை கொண்டு வருகின்றன. 

ஜியோ, ஏர்டெல் தவிர வோடபோன் இன்னும் சில நாள்களில் 5ஜியை அறிமுகப்படுத்தலாம் என தெரிகிறது. குறிப்பாக, ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் மொபைலில் மட்டுமின்றி வயர்லெஸ் தளத்திலும் இணைய சேவையை வழங்கி வருகின்றன. மேலும், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களே விரைவில் 5ஜி சேவைக்கு கட்டணம் வசூலிக்கவும் வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

சீனாவில் 5.5ஜி

தற்போது 5ஜி சேவை உலகம் முழுக்க சென்றடைந்திருக்கும் சூழலில், இன்னும் சில நகரங்கள் 5ஜியை பெற காத்திருக்கின்றன. இந்நிலையில், தற்போது 5.5ஜி நெட்வோர்க் சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. சீன தொலைத்தொடர்பு நிறுவனமான China Mobile இந்த நெட்வோர்கை அறிமுகப்படுத்தியுள்ளது. 5ஜி மற்றும் 5.5ஜி ஆகிய நெட்வோர்க்கிற்கு என்ன வித்தியாசம் என்பதை இங்கு காணலாம். 

5.5ஜி சேவை என்பது 5ஜி சேவையின் அடுத்த வெற்ஷனாகும். இதனை 5ஜி-Advanced அல்லது 5GA என்றும் அழைக்கிறார்கள். அதாவது 4ஜி சேவைக்கு பிறகு 4ஜி-Advanced அல்லது 4G LTE என்பதை போல்தான் இதுவும்… இதில் இணைய வேகமும், இணைப்பும் மேம்படும் என கூறப்படுகிறது. 5ஜி மற்றும் 5.5ஜி என்பது முற்றிலும் வேறான நெட்வொர்க் இல்லை. சற்றே மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்தான் 5.5ஜி. 

இந்தெந்த பிரச்னைகளுக்கு தீர்வு

5.5ஜி நெட்வொர்க் 10Gbps பதிவிறக்கம் வேகமும், 1Gbps பதிவேற்ற வேகத்தை வழங்க முடியும். இது 5ஜி சேவையை விட சிறந்தது. 5ஜி நெட்வொர்க்குகளின் குறைபாடுகளை சமாளிக்க 5.5ஜி அறிமுகப்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு, இது 5ஜி மற்றும் 6ஜி சேவைக்கு இடையே ஒரு பாலமாக செயல்படும் என கூறப்படுகிறது. கூடுதலாக, இது நெட்வொர்க் தாமதம், நம்பகமான இணைப்பு மற்றும் பேட்டரி நுகர்வு போன்ற பிரச்னைகளை குறைக்கும் எனவும் கூறப்படுகிறது. தற்போதுதான் சீனாவுக்கு இந்த தொழில்நுட்பம் வந்துள்ளது. விரைவில் இந்தியாவிலும் வர வாய்ப்பிருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.