பெங்களூரு: கர்நாடகாவில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக, மஜத மற்றும் சீட் கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கும் கர்நாடக பாஜக தலைவர்கள் ஆகியோருடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
வருகிற மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் தனித்து களமிறங்குகிறது. கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதால், அதனை சமாளிக்க முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜதவுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது.
அதிருப்தியாளர்களுக்கு சமாதானம்: இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட முன்னாள் முதல்வர் சதானந்தகவுடா, முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா, முன்னாள் அமைச்சர்கள் மாதுசாமி, சி.டி.ரவி ஆகியோர் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அவர்களுக்கு சீட் வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்துள்ளனர். முன்னாள் துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோளுக்கு சித்ரதுர்காவில் சீட் வழங்கியதற்கு ஹொலேகெரே பாஜக எம்எல்ஏ சந்திரப்பா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதேபோல சீட் மறுக்கப்பட்ட தற்போதைய எம்பிக்கள் அனந்த்குமார் ஹெக்டே, முனிசுவாமி, பிரதாப் சிம்ஹா ஆகியோரும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்று பெங்களூரு வந்தார். அதிருப்தியில் உள்ள சதானந்தகவுடா, சி.டி.ரவி, சந்திரப்பா, ரகு சந்தன் ஆகியோரை தான் தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு வரவழைத்து பேசினார். அப்போது பாஜகவின் வெற்றிக்கு கட்சியின் மாநில தலைமையுடன் இணைந்து பணியாற்றுமாறு கோரிக்கை விடுத்தார். அடுத்தடுத்த தேர்தல்களில் அவர்களுக்கு வாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே அமித் ஷாவை சந்திக்க வருமாறு மூத்த தலைவர் ஈஸ்வரப்பாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் அதனை ஏற்க மறுத்து, பெங்களூரு வரவில்லை.
பாஜக, மஜத தலைவர்களுடன் ஆலோசனை: இதனையடுத்து அமித் ஷா கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோகா ஆகியோருடன் கர்நாடக தேர்தல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது கடந்த 2019 தேர்தலை போல பெருவாரியான வெற்றியை ஈட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
பின்னர் அமித் ஷா தலைமையில் பாஜக, மஜத கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் முதல்வர் குமாரசாமி, மஜத மூத்த தலைவர் ஹெச்.டி.தேவகவுடா ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது அமித் ஷா பாஜக மஜத கூட்டணியை மேல்மட்ட அளவில் மட்டுமல்லாமல் அடிமட்டத்திலும் பலப்படுத்த வேண்டும். பூத் கமிட்டி அளவில் இரு கட்சிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம் ஆகியவற்றை இருகட்சிகளின் தலைவர்களும் இணைந்து நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
குமாரசாமிக்காக பிரச்சாரம்: பின்னர் அரண்மனை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்றார். பெங்களூரு ஊரகம், பெங்களூரு தெற்கு, பெங்களூரு மத்திய தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதையடுத்து மாலையில் சென்னப்பட்டணம் சென்ற அமித் ஷா, அங்கு திறந்த வேனில் மண்டியா வேட்பாளர் குமாரசாமிக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.