பாட்னா: கடந்த ஆறு மாதங்களாக புற்றுநோயால் அவதியுறுவதால் இந்த மக்களவைத் தேர்தலில் என்னால் போட்டியிடவோ, பிரச்சாரத்தில் பங்கேற்கவோ முடியாது என்று பாஜக மூத்த தலைவரும், பிஹாரின் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவொன்றில், “கடந்த ஆறு மாதங்களாக நான் புற்றுநோயுடன் போராடி வருகிறேன். இதனை இப்போது மக்களிடம் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று உணருகிறேன். இந்த மக்களவைத் தேர்தலில் என்னால் எதுவும் செய்ய முடியாது. இவை அனைத்தையும் பிரதமரிடம் நான் தெரிவித்து விட்டேன். எப்போதும் நாட்டிற்கும், பிஹாருக்கும் கட்சிக்கும் நன்றியுடன் அர்ப்பணிப்புடன் இருப்பேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
என்றாலும், பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான 27 உறுப்பினர்கள் கொண்ட பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் சுஷில் குமார் மோடி சேர்க்கப்பட்டுள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு பதில் அளித்துள்ள பாஜக எம்.பி., ரவி சங்கர், “மிகவும் வேதனையாக இருக்கிறது. அவர் விலைவில் குணமடைய வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சுஷில் குமார் மோடி யார்?: பாஜகவின் மூத்த தலைவராகவும், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) உறுப்பினருமான சுஷில் குமார் மோடி, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் உறுப்பினராகவும், பிஹாரின் துணை முதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.
கடந்த 1952 ஜன.5-ம் தேதி பிறந்த சுஷில் குமார், பாட்னா அறிவியல் கல்லூரியில் இளங்கலை தாவரவியல் படித்துள்ளார். தனது கல்லூரி காலங்களில் அவசரநிலையை எதிர்த்து ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சமூக இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அதில் இணைந்தார். அந்தக் காலகட்டத்தில் அவர் 5 முறை கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர், 1990ம் ஆண்டு பாட்னா மத்திய சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு தீவிர அரசியலில் ஈடுபட்டார். பின்னர் 1995 மற்றும் 2000 ஆண்டுகளில் அதே தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல், 2004 – 09 வரை பாகல்பூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டு நிதிஷ்குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சியில் பிஹாரின் துணை முதல்வராக பதவியேற்றார். 2013-ம் ஆண்டில் நிதிஷ் கூட்டணியை உடைக்கும் வரை அப்பதவியில் இருந்தார். பின்னர் 2017ம் ஆண்டில் ஐக்கிய ஜனதாதளம் – ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் மகா கூட்டணி அரசின் வீழ்ச்சியில் பெரும் பங்காற்றினார். புதிய அரசில் மீண்டும் துணை முதல்வர் பொறுப்பை ஏற்றார்.
பின்னர் 2020-ல் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவைத் தொடர்ந்து, பிஹாரில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் சுஷில் குமார் மோடி மாநிலங்களை உறுப்பினர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
40 மக்களவைத் தொகுதிகள் கொண்ட பிஹாரில் ஏப்.19 முதல் ஜுன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ம் தேதி நடைபெறுகிறது.