தன்னுடைய பெயர் உருவாக்கத்திலேயே தனக்கென தனி வரலாற்றைக் கொண்டிருக்கிறது `ராணிப்பேட்டை’. வரலாற்றில் பல மன்னர்கள் ராணிப்பேட்டையிலுள்ள ஆற்காட்டைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்திருக்கின்றனர். இந்த ராணிப்பேட்டை என்ற நகரம் உருவாவதற்குக் காரணமே ஆற்காடு நவாப் சதயத் உல்லாகான் தான். 1700-களின் தொடக்கத்தில் செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்கு, ஆற்காடு நவாப்களுக்குக் கப்பம் கட்ட மறுத்தார்.
இதனால் ராஜா தேசிங்கு மீது ஆற்காடு நவாப் போர் தொடுத்தார். அந்தப் போரில் ராஜா தேசிங்கு வீர மரணம் அடைந்தார். இருப்பினும், போரில் ராஜா தேசிங்கு வெளிப்படுத்திய வீரத்தை போற்றும் விதமாக அவரது இறுதிச்சடங்குகளை சதயத் உல்லாகான் ஏற்று நடத்தினார். அப்போது, ராஜா தேசிங்குவின் மனைவி ராணி பாய், சதி என்னும் உடன்கட்டை ஏறி ராஜா தேசிங்குவின் உடலுடன் சேர்ந்து தன்னுயிரையும் மாய்த்து கொண்டார்.
நினைவுச் சின்னம் அமைக்கப்பட்ட இடத்துக்கு ராணிப்பேட்டை என்றும் பெயரும் சூட்டினார். ராணிப்பேட்டை என்றொரு நகரம் இவ்வாறே உருவானது. இந்த நிலையில், 300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த வரலாற்றைப் பேசும் சுற்றுலாத் தளமாக இருக்க வேண்டிய இந்த நினைவுச் சின்னங்கள் தற்போது சிதலமைடைந்து வருகிறது. இந்த நினைவுச் சின்ன கட்டடத்தின் தற்போதைய நிலையை அறிய சென்றோம். அங்கு கட்டடத்திலும், கட்டடத்தைச் சுற்றிலும் புற்கள், மரங்களெல்லாம் முளைத்து புதர் மண்டி காணப்பட்டது.
இயற்கை ஒரு பக்கம் இப்படி செய்ய, அருகிலேயே டாஸ்மாக் இருப்பதால் குடிமகன்களோ அந்த நினைவு மண்டபத்தை பார் (Bar)-ஆக மாற்றி குடித்து வருகின்றனர். கட்டடங்களும் ஆங்காங்கே பெயர்ந்திருந்தது. நினைவு மண்டபத்திலிருக்கும் நினைவுச் சின்னங்களைப் பார்க்கச் சென்ற நம்மை அங்கிருந்த மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள், சிப்ஸ் பாக்கெட் கவர்கள், காலி வாட்டர் பாட்டில்கள், ஜூஸ் பாட்டில்கள் போன்ற சின்னங்கள்தான் வரவேற்றன.
2019-ம் ஆண்டு ராணிப்பேட்டை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அப்போது, இந்த வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பழைமை மாறாமல் புனரமைத்து, மக்கள் சென்றுவர வழிவகை செய்து, சுற்றுலாத் தளமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்தது. கோரிக்கைகள் வலுக்கவே நினைவுச் சின்னங்கள் புனரமைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்து பணிகளைத் துவங்கியது. அந்த புனரமைப்பின் போது புதர் மண்டி கிடந்த இடத்தை சுத்தம் செய்து, நினைவு கட்டடத்துக்கு வெள்ளையடித்தனர். தற்போது அந்த இடம் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிட்டது.
இந்தாண்டு ஜனவரி இறுதியில் நடைபெற்ற நகராட்சி, நகர மன்ற கூட்டத்தொடரின் போது ராஜா தேசிங்கு, ராணி பாயின் நினைவுச் சின்னம் ரூ.7 கோடி செலவில் புனரமைக்கப்படவுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் காந்தி எடுத்து வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் அறிவித்ததாகத் தகவல்கள் வெளியானது. இருப்பினும், அமைச்சர் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவதாலோ என்னவோ இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதும் வெளியிடப்படவில்லை.
வரலாற்று நினைவுச் சின்னங்கள் இப்படி பொலிவிழப்பதைப் பற்றி தெரியப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளாததற்கான காரணத்தைக் கேட்டறிய நகராட்சி அலுவலகம் சென்றிருந்தோம். அங்கு ஆணையர், நகர மன்ற உறுப்பினர் என இருவருக்கும் தேர்தல் பணிகள் வழங்கப்பட்டிருப்பதால் அவர்கள் அலுவலகம் வரவில்லை என அலுவலக உதவியாளர் தெரிவித்தார். இருவரும் இல்லையெனில் மக்கள் ஏதேனும் புகார்கள் தெரிவிப்பதாக இருந்தால் யாரிடம் தெரிவிப்பார்கள் என கேட்டோம். பிறகு நகராட்சி மேலாளரைக் காண்பித்தனர். நகராட்சி மேலாளரிடம் விசாரித்ததில், `இது நகராட்சி லிமிட்டுக்குள் வரவில்லை, இது குறித்து நகராட்சி பொறியாளரிடம் கேளுங்கள்’ என்றார்.
அவரும் அதே காரணத்தைச் சொல்லி, `நான் இப்போதுதான் இந்த பணிக்கு வந்தேன், இது குறித்து உதவி பொறியாளரிடம் கேளுங்கள்’ என்றார். அவரிடம் சென்று விசாரித்ததில், `இது நகராட்சி நிர்வாகம் செய்யக்கூடிய பணி அல்ல. இது நகராட்சி லிமிட்டுக்குள் வராது. இந்தப் பணிகளை தொல்லியல் துறைதான் மேற்கொள்ள வேண்டும். நீங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று அங்கிருக்கும் தொல்லியல் துறை அலுவலரிடம் கேட்டறியுங்கள்’ என்றார்.
ஆனால், நினைவுச் சின்னம் இருக்கும் இடத்தில் ராணிப்பேட்டை நகராட்சி என அச்சடித்து, இது மது அருந்தத் தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை என்ற பெயர் தோன்றக் காரணமான இந்த நினைவுச் சின்னங்களை, மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் புனரமைப்பு செய்யுமா இல்லை இப்படியே விட்டுவிடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.