புதுடெல்லி: “நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நாம் தனிநபரைத் தேர்ந்தெடுப்பது இல்லை. மாறாக, ஒரு கட்சியையோ அல்லகு கூட்டணியையோ தான் தேர்ந்தெடுக்கிறோம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் குறித்த என்ற கேள்விக்கு இவ்வாறு அவர் பதிலளித்தார்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான சசி தரூர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், “மோடிக்கு எதிரான ஒரு பிரதமர் வேட்பாளரை அடையாளம் காட்டும்படி பத்திரிக்கையாளர் ஒருவர் என்னிடம் மீண்டும் கேட்டார். நாடாளுமன்ற அமைப்பில் இந்தக் கேள்வி பொறுத்தமற்ற ஒன்று. நாம் எப்போதும் தனிநபர்களை (அதிபர் தேர்தல் முறையில் இருப்பது போல) தேர்ந்தெடுப்பதில்லை.
மாறாக, இந்தியாவின் பன்முகத்தன்மைகள், உள்ளடங்கிய வளர்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைகளைக் கொண்ட கட்சியையோ, கூட்டணியையோ தான் தேர்ந்தெடுக்கிறோம். மோடிக்கு மாற்று என்பது அனுபவமிக்க, திறமையான பன்முகத்தன்மை கொண்ட இந்தியத் தலைவர்களின் குழுவாகத்தான் இருக்கும். அவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு பதில் சொல்பவர்களாக இருப்பார்களே தவிர, தனிப்பட்ட ஈகோவால் உந்தப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் எந்தக் குறிப்பிட்ட நபரை பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள் என்பது இரண்டாம்பட்சமானது. நமது ஜனநாயகத்தையும், பன்முகத்தன்மையையும் காப்பாற்ற வேண்டும் என்பதே முதன்மையானது” என்று சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.
சசி தரூரின் இந்தக் கருத்து அரசியல் களத்தில், தனிநபர் வேட்பாளர்களை விட, கொள்கைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது. திருவனந்தபுரம் தொகுதியில் இருந்து மூன்று முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசி தரூர் இந்த முறையும் காங்கிரஸ் சார்பில் அதே தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் புதன்கிழமை தனது வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனிடையே, நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தல் களத்தில் மோடிக்கு எதிரான பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வியும் விவாதமும் எழுந்துள்ள நிலையில், சதி தரூரின் இந்த ட்விட்டர் பதிவு வந்துள்ளது. தற்போதை அரசியல் சூழலில் ‘மோடி இல்லையென்றால் வேறு யார்?’ என்ற சொல்லாட்சி வலம் வரத் தொடங்கியுள்ளது.
இந்தச் சொல்லாட்சிக்கு எதிராக இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான மஹுவா மொய்த்ராவும் கருத்து தெரிவித்துள்ளனர். “நரேந்திர மோடியின் புதிய இந்தியாவின் கீழ் இந்திய அரசியலும், சமூகமும் சந்தித்த அவலங்கள் குறித்த கீழ்த்தர விவாதங்களை மக்கள் முடித்துக்கொள்ள விரும்பும்போது வரும் அவல நகைச்சுவையே இந்தக் கேள்வி” என்று ஸ்வரா பாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின்போது திரிணமூல் காங்கிரஸின் மஹுவா மொய்த்ரா, “மோடியைத் தவிர வேறு யாராவது” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.