“செருப்பாக உழைப்பேன்” – காலணி மாலையுடன் விழுப்புரம் சுயேச்சை வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மக்களவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் அரசன் என்பவர் தனக்கு ஒதுக்கப்பட்ட செருப்பு சின்னத்தை மாலையாக கழுத்தில் அணிந்துகொண்டு வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது கவனத்தை ஈர்த்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்த பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்த அரசன் என்பவர் தொடர்ந்து உள்ளாட்சி, சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் இவர் சுயேச்சையாக போட்டியிடுவது வழக்கம். அப்போது தனக்கு அளிக்கப்படும் சின்னத்தை, மக்கள் மனதில் பதிய வைக்கும் விதமாக அந்த சின்னத்தை வைத்து வாக்கு சேகரிப்பார்.

அந்த வகையில், 2024 மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதி சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்த அரசனின் மனு தேர்தல் நடத்தும் அலுவலரால் ஏற்கப்பட்டு, அவருக்கு செருப்பு சின்னமும் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து தனது தொகுதிக்குள் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டவர், உளுந்தூர்பேட்டை நகரம் முழுக்க வியாபாரிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என அனைவரிடத்திலும் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள செருப்பு சின்னத்தை மாலையாக கழுத்தில் அணிந்துகொண்டு கையில் செருப்புச் சின்னம் கொண்ட பதாகையை எடுத்துக் கொண்டு வாக்கு சேகரித்தார்.

அப்போது, ”செருப்பு எவ்வாறு நமக்கு உழைக்கின்றதோ அதேபோன்று நானும் உங்களுக்காக செருப்பாக உழைப்பேன். கல்லு, முள்ளு, வெயில், அசுத்தம் உள்ளிட்டவற்றிம் இருந்து உங்களை காக்கும் செருப்பை போன்று நான் உங்களை காப்பேன்” என்று கூறி வீதி வீதியாக சென்று பொதுமக்களிடத்திலும் வியாபாரிகள் இடத்திலும் செருப்பு சின்னத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வேட்பாளர் அரசன் கூறும்போது, ”விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 தொகுதிகளுக்கு சென்று ஒவ்வொரு தொகுதிகளிலும் இரு நாள் தங்கிருந்து வாக்கு சேகரிக்க போகிறேன்” என்று கூறினார். சென்ற மக்களவைத் தேர்தலில் பலாப்பழம் சின்னம் ஒதுக்கியபோது, அப்பழத்தை சுமந்து வாக்கு சேகரித்ததாக கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.