கோவை: பிரதமர், முதல்வர், எதிர்கட்சி தலைவர் என அடுத்தடுத்து அரசியல் கட்சியின் தலைவர்கள் பிரச்சாரத்துக்காக கோவைக்கு வருகின்றனர். இதனால் கோவையில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி நடக்கிறது. மக்களவைத் தேர்தலுக்கான தேதி நெருங்குவதால் அரசியல் கட்சியின் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தமிழக அரசியல் களங்களில் கோவை முக்கியமானது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி ஆகிய இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கோவை மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் 11 வேட்பாளர்களும், சுயேச்சைகள் சார்பில் 26 பேரும் என மொத்தம் 37 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் அரசியல் கட்சிகளின் சார்பில் 6 வேட்பாளர்களும், 9 சுயேச்சைகள் என மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கனிமொழி எம்.பி, காங் தலைவர் செல்வப் பெருந்தகை பிரச்சாரம்: அதேபோல், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சிகளின் முன்னணி தலைவர்கள் கோவைக்கு தொடர்ச்சியாக வந்து தங்களது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தவாறு இருக்கின்றனர்.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கடந்த 29-ம் தேதி கோவைக்கு வந்து, கோவை, பொள்ளாச்சி திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வப் பெருந்தகை இன்று (ஏப் 3-ம் தேதி) கோவை கணபதியில் பொதுக்கூட்டம் நடத்தி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் அடுத்தடுத்து வருகை: தே.ஜ.கூட்டணியின் சார்பில் கோவையில் பாஜக வேட்பாளராக அண்ணாமலை, பொள்ளாச்சியில் வசந்தராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களை ஆதரித்து வரும் 10-ம் தேதி கோவையில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திரமோடி பிரச்சாரம் செய்ய உள்ளார்.
தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கணபதி ப.ராஜ்குமார் (கோவை), ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி) ஆகியோரை ஆதரித்து வரும் 13-ம் தேதி செட்டிபாளையம் சாலையில் எல் அன்ட் டி பைபாஸ் சாலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் திமுக சார்பில் நடத்தப்படுகிறது.
இதில் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்கிறார். அதேபோல், எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி நாளை (ஏப்.4-ம் தேதி) கோவை வருகிறார். கொடிசியா மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கோவை வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வரும் 12-ம் தேதி கோவைக்கு வருகிறார். அன்றைய தினமோ அல்லது அதற்கு மறுநாளோ கோவை, பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். தொடர்ந்து அரசியல் கட்சிகளின் முன்னணி தலைவர்களின் வருகையால், கோவையில் தேர்தல் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது.