மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், திரைப்பட நடிகருமான கமல்ஹாசன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “எந்த சித்தாந்தமும் மக்களுக்காகத்தான். மாவோயிஸ்ட், கம்யூனிஸ்ட், பெரியாரிஸ்ட், அம்பேத்கரிஸ்ட் அனைத்தும் தேசத்திற்கு பாதுகாப்பின்மை வரும்போது தோளோடு தோள் நின்று களம் காண வேண்டும். ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் நானும், தம்பி திருமாவளவனும் தோள் உரசி களம் கண்டிருக்கிறோம்.
இந்த முறை அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பை கொடுத்துவிட்டால், ஜனநாயகமே இருக்காதோ என்று அறிஞர்கள் கவலைப்படுகிறார்கள். அவர்கள் அறிஞர்கள் கவலை மட்டும் படுவார்கள். ஆனால் நாங்கள் வீரர்கள். களம் கண்டே ஆக வேண்டும். என் கட்சிக்காரர்கள் `என்ன அண்ணே இந்த முறை தியாகம் செய்துவிட்டீர்களே..’ என்கிறார்கள். இது தியாகமல்ல, வீரம். தம்பி திருமாவளவனுக்கும் அதே பிரச்னைதான் வந்திருக்கும். `எத்தனை வருடங்களாக இரண்டு தொகுதிகள் ? மூன்றாக கேட்டுப் பாருங்கள்’ என்று கூறியிருப்பார்கள். ஆனால் அதுவல்ல இப்போதைய தேவை. களம் காண வேண்டியதுதான் தேவை. அதற்காகத்தான் இங்கு அவரும் வந்திருக்கிறார். நானும் வந்திருக்கிறேன்.
அரசியலுக்கு வந்து விட்டீர்கள், உங்கள் எதிரி யார் என்று முடிவு செய்து கொள்ளுங்கள் என்று பலர் எனக்கு அறிவுரை சொன்னார்கள். ஆனால் நான் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே, சிறிதளவு அரசியல் தாக்கம் என்னுள் ஏற்பட்டபோதே, என் எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டேன். சாதியம்தான் என் எதிரி. என் வாழ்க்கையில் சாதிக்கு இடமில்லை. என் சினிமாக்களும் அப்படித்தான். அப்புறம் ஏன் சினிமாக்களுக்கு சாதிப் பெயர்கள் வைக்கிறீர்கள் என்று சிலர் கேட்பார்கள். அதற்கு இப்போது விளக்கம் சொல்கிறேன். குடியின் கொடுமைகளைப் பற்றி, மதுவின் கொடுமைகளைப் பற்றி நான் ஒரு படம் எடுக்க நேர்ந்தால், அதன் மையப் பாத்திரம் ஒரு குடிகாரனாகத்தான் இருப்பான்.
அவன் இல்லாமல் அந்த கருத்தை சொல்ல முடியாது. அதனால் சாதி வெறியனை மையப்படுத்திதான், படத்தின் நிறைவுக் கருத்தை சொல்ல முடியும். அவன் பாழாய் போன கதையையும், பண்பட்ட கதையையும் நாம் சொல்லும்போது, அது சாதியை உயர்த்திப் பிடிப்பதாகாது, விமர்சிப்பதாகும். சாதியே இல்லை என்கிறீர்கள். ஆனால் சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே என்று கேட்டால், அதற்கும் ஒரு விளக்கம் இருக்கிறது. இதுவும் பதில் இல்லை, விளக்கம்.
இன்னும் எத்தனை பேர் அடிமை பிறப்புடன் இருக்கிறார்கள் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவைப் போல இங்கு நிற வேறுபாடு கிடையாது. என் கலரிலும் விலங்கு போட்டவன் இருப்பான். தம்பி கலரிலும் விலங்கு போட்டவன் இங்கு இருப்பான். அவர்களை எல்லாம் விடுவிக்க வேண்டும். அதற்காகத்தான் இங்கு வந்திருக்கிறேன். இந்த கணக்கெடுப்பு வேண்டும் என்று 1921-ல் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட்டபோது, பதறிப் போனார்கள் சனாதனவாதிகள். அதன்பிறகு 1979-ல் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு மண்டல் கமிஷன் அமைக்க வேண்டும் என்று சொன்னபோது, இப்போது இருக்கும் பா.ஜ.க என்ற கட்சி அப்போது இல்லை. ஆனால் நிறமும் குணமும் மாறாமல் அப்போது இருந்தவர்கள், பெரும் குரலெழுப்பினார்கள். அப்போது பிரதமராக இருந்த வி.பி.சிங் அதை அமல்படுத்த முற்பட்டபோது, பா.ஜ.க செய்த ரகளையை நாம் இன்னும் மறந்தபாடில்லை. அதன்பிறகு அவர்கள் சமரசம் செய்வது போல், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என்ற கவட்டியை சொருக நினைத்தார்கள். ஆனால் அதுவும் நடக்கவில்லை.
தமிழ்நாடு மீனவர்களை காக்கத் தவறிய அரசு இந்த ஒன்றிய அரசு. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும், எப்போதும் இல்லாத அளவுக்கு நம் கடலோடிகள் கைதாவதும், அவர்களின் படகுகள் கைப்பற்றப்படுவதும், பிறகு அது ஏலம் விடப்படுவதும் தற்போது கூடிக் கொண்டிருக்கிறது. இல்லை இது அவர்கள் செய்தது.. இவர்கள் செய்தது, அதனால்தான் இப்படி நடக்கிறது என்று எங்களுக்கு சரித்திரம் சொல்லாதீர்கள். இலங்கைக்கும், தமிழ்நாட்டுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளாக பகையும் உறவும் மாறி மாறி இருந்திருக்கிறது. அதனால் இந்த சரித்திரக் கதையெல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள். இந்த 10 ஆண்டு காலத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள். அதை மட்டும் சொல்லுங்கள். ஒன்றுமே செய்யவில்லை இந்த ஒன்றிய அரசு என்பதுதான் உண்மை. ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் தருவதாக கூறினார்கள். இங்கிருக்கும் தம்பிகள், சகோதரிகள் கூறுங்கள் உங்களுக்கு எத்தனை பேருக்கு அப்படி வேலை கொடுத்திருக்கிறார்கள் ? மத்திய அரசின் 30 லட்சம் வேலைகளைக் கொடுத்தாலே ஓரளவுக்கு மூச்சுத் திணறாமல் இருக்கலாம். அதை கூட செய்யவில்லை அவர்கள்.
அதற்கு பதிலாக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு, மலிவு விலையில் அரசின் சொத்துக்களை தாரை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு மோசடி. அதையடுத்து தேர்தல் பத்திர மோசடி. சட்டத்தை வளைத்து, அதிகாரப்பூர்வமாக பணத்தை பறிக்கும் வழிதான் அது. 1,000 கோடி ரூபாய் பணம் கொடுக்கும் எந்த முதலாளியாவது ஆற்றோடு போவானா ? ஒரு ரூபாய் போட்டால் ஒன்பது ரூபாய் எடுக்க வேண்டும் என்பதுதானே வியாபாரியின் குணம் ? அவர்கள் ஆதாயம் பெற்றவர்கள். அவர்களை வழிக்கு கொண்டு வருவதற்கு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டுகளை அனுப்புவார்கள். சில கம்பெனிகள் தங்கள் வருவாயை விட அதிக தொகையை கொடுக்கிறார்கள். அப்படியென்றால் அந்த பணத்தின் வண்ணம் என்ன ? அதுதான் கறுப்புப் பணம். அதையெல்லாம் ஒழிக்கிறேன் என்று சொன்னார்களே ? ஒன்றிய அரசு சமூக நீதிக்கு எதிரானது. சிறுபான்மையின மக்களை அச்சத்தில் வாழ வைக்கிறது. மீனவர்களை பாதுகாக்கத் தவறிவிட்டது. விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறது இந்த ஒன்றிய அரசு. பெண்களைப் பற்றி எந்த கவலையும் இல்லாத அரசு இந்த ஒன்றிய அரசு. ஆனால் ஒன்றிய அரசு என்று சொன்னால் இவர்களுக்கு கோபம் வருகிறது.
அதனால் மாற்றிச் சொல்கிறேன், இவர்கள் ஒன்றிய அரசல்ல, மக்களுடன் ஒன்றாத அரசு. இவர்களுக்கு அடுத்த வாய்ப்பை கொடுக்கக் கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் என் கருத்தை சொல்கிறேன், இவர்கள் அகற்றப்பட வேண்டும். தமிழ்நாட்டின் குரலாக, உங்கள் குரலாக இன்று ஸ்டாலின் திகழ்கிறார். ஒட்டுமொத்த இளைஞர்களின் குரலாக தம்பி உதயநிதி திகழ்கிறார். குரலற்றவர்களின் குரலாக பெருஞ்சிறுத்தை தம்பி திருமாவளவன் அவர்கள் இருக்கிறார். தம்பி உதயநிதி அவர்கள் திருமாவளவனை 6 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று சொன்னார்கள். எனக்கு சமத்துவம் பிடிக்கும். பேராசையும் பிடிக்கும். அதனால் நீங்கள் எல்லோரும் மனது வைத்து 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இவரை வெற்றிபெற வைத்தால்தான், அவர்களுக்கு பாடம் கற்பிக்க முடியும். திருமா அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர் மட்டுமல்ல. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் போராடுகிறார். அதனால் அவருக்கு பானை சின்னத்தில் வாக்களியுங்கள். அரசியல் சமையலுக்கும், சமத்துவத்துக்கும் உகந்த பானை இது” என்றார்.