கர்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டத்தில் 16 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன், ஒரு வழியாக மீட்புக் குழுவினரின் 18 மணிநேரப் போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.
போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, இண்டி தாலுகாவின் லச்சயன் கிராமத்தில் நேற்று மாலை தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், பாசனத்துக்காக தன்னுடைய தாத்தா தோண்டிவைத்திருந்த 16 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்திருக்கிறார்.
அப்போது அந்த வழியே சென்ற நபர், சிறுவனின் அலறல் சத்தத்தைக் கேட்டு, சிறுவனின் குடும்பத்தாரிடம் சம்பவத்தைக் கூறினார். பின்னர், சிறுவனின் குடும்பத்தாரிடமிருந்து தகவலறிந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை அதிகாரிகள், மீட்புப் பணிகளுக்கான உபகரணங்களுடன் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
கூடவே, மருத்துவக் குழு ஒன்று, சிறுவன் மீட்கப்பட்டவுடன் உடனடியாக இண்டியிலுள்ள மருத்துவமனைக்குச் சிறுவனைக் கொண்டுசெல்ல ஆக்ஸிஜன் வசதி கொண்ட ஆம்புலன்ஸுடன் தயார் நிலையில் வந்தனர், சரியாக 6:30 மணியளவில் மீட்புப் பணியை மேற்கொண்ட மீட்புக் குழுவினர், முதலில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் கேமராவை இறக்கி சிறுவனின் அசைவைக் கண்டறிந்து, சுவாசத்துக்காக குழாய் மூலம் சிறுவனுக்கு ஆக்ஸிஜன் வழங்கினர்.
அதையடுத்து, ஆழ்துளைக் கிணற்றுக்கு இணையாக அருகிலேயே 21 அடி ஆழத்துக்குக் குழி தோண்டிய மீட்புக் குழுவினர், 18 மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு ஆழ்துளைக் கிணற்றிலிருந்து சிறுவனை பத்திரமாக வெளியே மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவனுக்குத் தற்போது தேவையான மருத்துவ உதவிகளை மருத்துவக் குழு அளித்து வருகிறது.