நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதத்துக்கு முன்பாக, மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காளி கிராமப் பெண்கள் உட்பட பலரும், ஆளும் திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த ஷாஜகான் ஷேக் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து நில அபகரிப்பு, பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்தப் போராட்டத்துக்கு முன்பே ஷாஜகான் ஷேக் தலைமறைவானதால், இந்தப் பிரச்னை பெரிய அளவில் வெடித்தது.
பின்னர், மேற்கு வங்க மாநில உயர் நீதிமன்றத்தின் தலையீட்டால், 55 நாள்களாகத் தலைமறைவாக இருந்த ஷாஜகான் ஷேக்கை பிப்ரவரி 29-ம் தேதி போலீஸார் கைதுசெய்தனர். இந்த நிலையில், ஷாஜகான் ஷேக் மீது பிரமாணப் பத்திரிகை தாக்கல் செய்தது தொடர்பான வழக்கு, மாநில உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இதனை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான அமர்வு, “ஒரு பிரமாணப் பத்திரம் சரியாக இருந்தாலும்கூட இது வெட்கக்கேடானது. அவ்வளவு ஏன், இதில் ஒரு சதவிகிதம் உண்மை இருந்தாலும் முற்றிலுமாக வெட்கக்கேடானது. பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் என்று மேற்கு வங்க அரசு கூறுகிறது. ஒரு வேளை, குற்றம் நடந்தது என்று ஒரு பிரமாணப் பத்திரம் மூலம் நிரூபணமானால்கூட, அது மொத்தமும் பொய்யாகிவிடும். ஆளும் அரசும், மாவட்ட நிர்வாகமும் 100 சதவிகிதம் இதற்குப் பொறுப்பு” என்று கண்டிப்பாகக் கூறிவிட்டது.
அதோடு, ஷாஜகான் ஷேக்கின் வழக்கறிஞரிடம் கடுமையாகப் பேசிய நீதிமன்ற அமர்வு, “55 நாள்கள் நீங்கள் தலைமறைவாக இருந்துகொண்டு, கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தீர்கள். உங்களின் கண்களை நீங்கள் மூடிக்கொள்வதால், மொத்த உலகமும் இருண்டுவிடாது” என்று கூறி, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தது.