வயநாடு: மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது வேட்புமனு தாக்கலின்போது பிரமாணப் பத்திரத்தில் தனக்கு 20 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி. இதற்கான வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் உடன் சொத்து மதிப்பு உள்ளிட்ட பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார். அதில் தனக்கு 20 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, அசையும் சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.9.24 கோடி என்றும், அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.11.14 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பங்குச்சந்தை முதலீடுகளில் ரூ.4.3 கோடியும், மியூச்சுவல் ஃபண்ட் டெபாசிட்டில் ரூ.3.81 கோடியும், வங்கிக் கணக்கில் ரூ.26.25 லட்சமும், தங்கப் பத்திர முதலீட்டில் ரூ.15.2 லட்சமும், அஞ்சல் சேமிப்பு மற்றும் காப்பீட்டுக் கொள்கைகளில் முதலீடாக ரூ. 61.52 லட்சமும், தான் வைத்திருக்கும் நகைகளின் மதிப்பு ரூ.4.2 லட்சமும் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், ரொக்கமாக கைவசம் ரூ.55,000 வைத்திருப்பதாகவும், கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ரூ.1.02 கோடி வருமானம் ஈட்டியதாகவும் பிரமாணப் பத்திரத்தில் ராகுல் தெரிவித்துள்ளார்.
டெல்லியின் மெஹ்ராலியில் விவசாய நிலமும், குருகிராமில் உள்ள அலுவலகத்தின் மதிப்பு ரூ.11 கோடி என்றும், ஆனால், இதில் பிரியங்கா காந்திக்கு பங்கு உள்ளது என்றும் ராகுல் தகவல் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் ஆனி ராஜாவின் மொத்த சொத்து மதிப்பு ரூ.72 லட்சம் ஆகும். இதில், ரூ.71 லட்சம் மதிப்புள்ள பரம்பரை சொத்து தவிர, கையிருப்பாக ரூ.10,000 ரொக்கம், வங்கிக் கணக்கில் ரூ.62,000 மற்றும் ரூ.25,000 மதிப்புள்ள நகைகள் இருப்பதாக ஆனி ராஜா தனது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.