பெங்களூரு: கர்நாடகாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த 2 வயது குழந்தையை 20 மணி நேர போராட்டத்துப் பின்னர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். நேற்று மாலை 6.30 மணியளவில் மீட்புப் பணி தொடங்கிய நிலையில் குழந்தை தற்போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் லச்சாயன் கிராமத்தில் நேற்று (ஏப்.3) மாலை ஸ்வஸ்திக் முஜகொண்டா என்ற 2 வயது ஆண் குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. வீட்டிலிருந்து விளையாட வெளியே சென்ற குழந்தை தவறிவிழுந்துவிட அதன் அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் குழந்தையின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு காவல்துறை, தீயணைப்பு துறையினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், மருத்துவக் குழு விரைய நேற்று மாலை 6.30 மணியளவில் மீட்புப் பணி தொடங்கியது. குழந்தை விழுந்து குழிக்கு அருகிலேயே 21 அடி ஆழத்தில் இன்னொரு குழி தோண்டப்பட்டு அதன் வழியாக பக்கவாட்டில் துளையிட்டு குழந்தையை மீட்டுள்ளனர். குழந்தை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிகள் குறித்து விஜயபுரா துணை ஆணையர் பூபாலன் கூறுகையில், “குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளோம். குழந்தை தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டது. மீட்புக் குழுவினருக்கும், முழு ஒத்துழைப்பு வழங்கிய குழந்தை ஸ்வஸ்திக் குடும்பத்தினருக்கும் நன்றி” என்றார்.
“சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடனேயே அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. முதலில் குழந்தை சுவாசிக்க ஏதுவாக மீட்புக் குழுவானது சிறிய குழாயின் மூலம் ஆக்சிஜனை குழிக்குள் செலுத்தியது. கூடவே எண்டோஸ்கோபி கேமரா ஒன்றும் குழிக்குள் செலுத்தப்பட்டது. அதன்மூலம் குழந்தையின் நிலையை மருத்துவர்கள், மீட்புக் குழுவினர் கண்காணித்து வந்தனர்.
குழந்தை விழுந்த குழிக்கு அருகிலேயே 21 அடிக்கு இன்னொரு குழியும், பின்னர் பக்கவாட்டில் ஒரு குழியும் தோண்டப்பட்டது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தபோது இரண்டையும் இணைக்கும் பகுதியில் பாறை இருந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. சவால் மிகுந்தாலும் கூட இறுதியில் வெற்றி கிட்டியது” என மீட்புப் பணிகள் குறித்து காவல் துணை ஆணையர் பூபாலன் கூறினார்.
அந்தக் குழியை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆழ்துளை கிணறை குழந்தையின் தாத்தா சங்கரப்பா தோண்டியுள்ளார். ஆனால் தண்ணீர் வராததால் அதை அப்படியே விட்டுவிட்டிருக்கிறார்.