புதுடெல்லி: “காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சொந்த விருப்பத்துக்கு மாறாக கட்டாயத்தினால் அரசியல்வாதியாக மாறியுள்ளதாக தெரிகிறது” என்று நடிகையும், பாஜக வேட்பாளருமான கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்துள்ளார்.
வரும் மக்களவைத் தேர்தலில் தனது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் கங்கனா. அவர் அளித்த பேட்டி ஒன்றில், “ஒரு விஷயத்தை அவரால் (ராகுல் காந்தி) செய்ய முடியுமா இல்லையா என்பதை பற்றி கவலை இல்லாம் தொடர்ந்து அவர் மீது அந்த விஷயம் திணிக்கப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இன்னும் சில ஆண்டுகளில் அவர் 60 வயதை அடைந்து விடுவார். ஆனாலும், இன்னும் அவர் இளம் தலைவர் என்றே அறிமுகப்படுத்தப்படுகிறார்.
தனது சொந்த சூழ்நிலைகளால் அவர் பாதிக்கப்படுவதாக நினைக்கிறேன். அவர் தனது சொந்த விருப்பத்துக்கு மாறாக கட்டாயத்தினால் அரசியல்வாதியாக மாறியுள்ளதாக தெரிகிறது. வாரிசு முறையால் பிள்ளைகள் பாதிக்கப்படுகிறார்கள். அவர் வேறு ஏதாவது செய்ய விரும்பியிருந்தால் என்னச் செய்வது? உதாரணமாக, அவர் நடிகராக விரும்பியிருந்தால், அவர் இப்பாேது நடிகராகி இருக்கலாம். சினிமா உலகில் தங்கள் பெற்றோர்களால் அதே தொழிலில் ஈடுபடுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்ட பலரை நான் பார்த்திருக்கிறேன். அதனால் அவர்களது வாழ்க்கையே பாழானது.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரையும் எனக்கு பிடிக்கும். அவர்கள் இருவரும் ஒரு சிக்கலான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தகுதியானவர்களே. இப்போதும் காலம் கடந்து விடவில்லை. அவர்களின் அம்மா (சோனியா காந்தி) அவர்களை வழிநடத்த வேண்டும்” என்று கூறினார்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி இந்த மக்களவைத் தேர்தலில் மீண்டும் அந்தத் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அவரது குடும்பக் கோட்டையாக இருந்த அமேதி தொகுதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். முன்னதாக, தனது அரசியல் நுழைவை 2004ம் ஆண்டு அமேதியில் இருந்து தொங்கி இருந்த ராகுல் காந்தி அதே தொகுதியில் 2009, 2014 என இரண்டு முறை வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியங்கா காந்தி, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். என்றாலும் அவர் இதுவரை தேர்தலில் போட்டியிடவில்லை. இந்தத் தேர்தலில் தனது தாயாரின் தொகுதியான ரேபரேலியில் பிரியங்கா போட்டியிட வேண்டும் என்று உத்தரப் பிரதேச காங்கிரஸார் விரும்புகின்றனர். ரேபரேலி எம்.பி.யான சோனியா காந்தி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு மாநிலங்களவை உறுப்பினராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.