புதுச்சேரி: தவறாமல் வாக்களிக்க வலியுறுத்தும் மாவட்ட தேர்தல் அதிகாரியின் கடிதம் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மூலம் அவர்களின் பெற்றோர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. கிட்டதட்ட 50 ஆயிரம் பெற்றொர்களுக்கு இந்த கடிதம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19.04.2024 அன்று நடைபெற உள்ளது. இதனையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் நோக்கில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் புதுச்சேரி, தேர்தல் துறை சார்பில் முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் (SVEEP) திட்டத்தின்கீழ் பல்வேறு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பொதுவாக நகரப் பகுதிகளில் ஒரு சில வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு சற்று குறைவாக இருப்பதால், நகரப் பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக, நகரப் பகுதியில் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, மக்களவைத் தேர்தலில் தவறாது வாக்களிக்க வேண்டி, மாவட்ட தேர்தல் அதிகாரி தனிப்பட்ட கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், தனது பெயரில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள தனிப்பட்ட வேண்டுகோள் கடிதங்களை, நகரப் பகுதிகளில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் வழங்கி, அதனை, அவர்களது பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர் மூலம் அவர்கள் பெற்றோர்களிடம் தவறாது சேர்த்திட அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
மாவட்ட தேர்தல் அதிகாரி கடிதம், மாணவ மாணவியர் மூலம் சுமார் 50ஆயிரம் பெற்றோர்களுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்நிகழ்வில் உயர் நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.