சென்னை: விரைவில் வரவுள்ள 6-ஜி தொழில்நுட்பம் இந்தியாவிலும், உலகிலும் பல்வேறு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று மத்திய அரசின் தொலைதொடர்புத்துறை செயலர் தீரஜ் மிட்டல் நம்பிக்கை தெரிவித்தார்.
சென்னை ஐஐடி, மத்திய அரசின் தொலைதொடர்புத்துறையுடன் இணைந்து தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி பாதுகாப்பான சாலைபயணத்தை உறுதி செய்யும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்தையும், இதுதொடர்பான 2 நாள் மாநாட்டையும்மத்திய அரசின் தொலை தொடர்புத்துறை செயலர் தீரஜ் மிட்டல் டெல்லியில் இருந்தவாறு காணொலி வாயிலாக ஐஐடியில் நேற்று மாலை தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
தொழில்துறை வளர்ச்சி காரணமாக வாகனங்களின் எண்ணிக்கை பெருகியுள்ளது. அதேநேரத்தில் சாலை விபத்துகளும் அதிகரித்தவண்ணம் உள்ளன. காற்றுமாசுபாடும் அதிகரித்து வருகிறது. இ
த்தகைய சூழலில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதுபாராட்டுக்குரியது. வாகன விபத்துகளை குறைக்கவும், பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யவும் செயல்படுத்தப்படும் புதிய கண்டுபிடிப்புகளில் தொலை தொடர்புத் துறை முக்கிய பங்காற்ற முடியும்.
இந்தியாவில் ஸ்மார்ட் போன் வைத்திருப்போரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சீர்மிகு நகரங்களில் வாகனங்களின் இயக்கத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்களும், தகவல் தொடர்பு சாதனங்களும் நிறுவப்பட்டுள்ளன. வாகனங்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்களும் கிடைக்கின்றன.
ஏ.ஐ.தொழில்நுட்பம்: இன்றைய தினம் ஏ.ஐ. என அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. 5-ஜிதொழில்நுட்பத்தால் இந்தியாவில் அதிவேக இணைய வசதி கிடைக்கிறது. குறைந்த கட்டணத்தில் வேகமாக தரவுகள் கிடைக்கின்றன.
இன்னும் சொல்லப்போனால் உலகஅளவில் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைந்த செலவில் மிக வேகமாக தரவுகள் கிடைக்கின்றன. இவை நவீன பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்கின்றன. இவற்றை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.
வெகுவிரைவில் வரவுள்ள 6-ஜி தொழில்நுட்பம் உணர்வுகளையும், கணினிகளையும் ஒன்றிணைக்கக்கூடியதாக இருக்கும். இந்த தொழில்நுட்பம் இந்தியாவிலும், உலகிலும் பல்வேறு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
ஐஐடி பேராசிரியர் கீதாகிருஷ்ணன் ராமச்சந்திரன் புதிய திட்டம் குறித்து அறிமுகவுரை ஆற்றினார். தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் ஐஐடி பேராசிரியர் மகேஸ் பஞ்சநுல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.