Doctor Vikatan: வருடத்தின் மற்ற நாள்களைவிட, சம்மரில் உடல் எடையைக் குறைப்பது மிகவும் சுலபம் என்கிறாள் என் தோழி. அவள் அப்படித்தான் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 6 கிலோ வரை குறைத்ததாகச் சொல்கிறாள். சம்மரில் வெயிட்லாஸ் செய்வது ஈஸி என்பது உண்மையா…. அப்படியானால் அதற்கான உணவுப்பழக்கம் எப்படியிருக்க வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஸ்போர்ட்ஸ் அண்ட் ப்ரிவென்ட்டிவ் ஹெல்த் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.
நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். மற்ற நாள்களைவிட, கோடைக்காலத்தில் உடல் எடையைக் குறைப்பது சற்று சுலபமானதுதான். காரணம், அந்த நாள்களில் நாம் திட உணவுகளைவிடவும் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வோம். அதனால் இயல்பாகவே எடை குறையும்.
காலை உணவுக்கு கஞ்சி, கூழ், பழையசாதம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். மதிய உணவுக்கு நிறைய தயிர்ப்பச்சடி, சாலட், பருப்பு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். இடைப்பட்ட நேரத்தில், இளநீர், லெமன் ஜூஸ் போன்றவற்றைக் குடிக்கலாம். உடற்பயிற்சிகள் செய்வோர் என்றால் புரோட்டீன் பவுடர் எடுத்துக்கொள்ளலாம். இரவு உணவுக்கு சூப், அதிக எண்ணெய் சேர்க்காமல் லேசாக வதக்கிய காய்கறிகள் எடுத்துக்கொள்ளலாம்.
மதிய உணவுக்கு எலுமிச்சை சாதம், தேங்காய்சாதம், தயிர்சாதம், புளியோதரை, மாங்காய் சாதம் எடுத்துக்கொள்ளலாம். தேங்காய் சாதத்துடன் ஏதேனும் ஒரு காய்கறி, எலுமிச்சை சாதத்துடன் சாலட் அல்லது பொறியல், புளியோதரையுடன் வேகவைத்த முட்டை அல்லது நிறைய காய்கறிகள் சேர்த்த அவியல், மாங்காய் சாதத்துடன் சாலட் அல்லது தயிர்ப்பச்சடி, தயிர் சாதத்துடன் நிறைய காய்கறிகள் என சரியான காம்பினேஷனில் எடுத்துக்கொள்ளவும்.
வெள்ளரிக்காய், வெங்காயம், தக்காளி, வாழைத்தண்டு, பூசணிக்காய் போன்றவற்றில் நிறைய கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சைமிளகாய் சேர்த்து தயிர் சேர்த்து, பச்சடியாகச் செய்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது. தர்பூசணி பழத்துண்டுகளுடன் கொத்தமல்லி, புதினா இலைகள் சேர்த்து எலுமிச்சை சாறு சேர்த்து சாலடாக சாப்பிடலாம்.
நிறைய நீர்மோர் எடுத்துக்கொள்ளலாம். கொஞ்சமாகத் தயிர் எடுத்து அதில் நிறைய தண்ணீர் சேர்த்து இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அரைத்த விழுது சேர்த்துக் குடிக்கலாம். இரவு உணவுக்கு இட்லி, தேங்காய் சட்னி சாப்பிடலாம். மேற்குறிப்பிட்ட உணவுகள், கோடைக்காலத்தில் செரிமானத்தை சிக்கலின்றி வைக்கும். எடைக்குறைப்புக்கும் உதவும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.