அகமதாபாத்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் கேப்டன் கில் 89 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 200 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் சஷாங்க் சிங்கின் அதிரடி ஆட்டத்தால் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பஞ்சாப் தரப்பில் அதிரடியாக ஆடிய சஷாங்க் சிங் 29 பந்தில் 61 ரன்னும், அசுதோஷ் சர்மா 17 பந்தில் 31 ரன்னும் எடுத்தனர். இந்நிலையில் என்னை நம்பி வாய்ப்பு அளித்த ஷிகர் தவான் மற்றும் பஞ்சாப் நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிப்பதாக அசுடோஷ் சர்மா கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,
என் மீது இவ்வளவு நம்பிக்கை வைத்த தவான் பாய் மற்றும் அணிக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். என்னுடைய செயல்பாடுகள் நல்ல உணர்வை கொடுக்கிறது. அதை விட முக்கியமாக அணி வெற்றி பெற்றதால் அதற்காக மகிழ்ச்சியடைகிறேன். தவான் பாஜி என்னை அதிகமாக நம்பினார். நான் சாதாரணமாக இருந்து என்னால் இதை செய்ய முடியும் என்று நம்பினேன். அதே போல் என் மீது நம்பிக்கை வைத்த சஞ்சய் சாருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
அவர் எனக்கு நிறைய நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். எனவே என்னால் இதை செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் நான் சாதாரணமாக விளையாடினேன். ஏனெனில் ஏற்கனவே என்னுடைய சொந்த ஊர் அணிக்காக போட்டிகளை நான் வென்றுள்ளேன். எங்களுடைய உள்ளூர் அணியில் அமைய் கௌரஸ்யா சாருடன் பயிற்சிகள் செய்தேன். அவர் தான் உனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது நீயும் ஹீரோவாக வருவாய் என்று என்னிடம் சொன்னார். இவ்வாறு அவர் கூறினார்.