மதுரை: மதுரை சோழவந்தான் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேனி நாடாளுமன்ற அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு வாக்குகள் கேட்டு சி.ஆர்.சரஸ்வதி பிரச்சாரம் செய்தார்.
அவர் பேசுகையில், “தமிழகத்தில் மூன்று அணியாக இருக்கிறோம், ஒன்று துரோகத்துக்கு பேர் போன, இரட்டை இலை சின்னத்தை விலைபேசிக்கொண்டு திமுகவுக்கு சாதகமாக பிரச்சாரம் செய்து, அதிமுகவை அழித்துக் கொண்டிருக்கிற எடப்பாடி அணி. மற்றொன்று திமுக அணி. அடுத்தது தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமையில் என மூன்று அணிகள் இருக்கின்றன.
எடப்பாடி பழனிசாமி எவ்வாறு முதல்வர் ஆனார் என்று நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. இன்றுவரை டிவியில் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் உலகத்திலேயே முட்டி போட்டு முதல்வரானது எடப்பாடி பழனிசாமி தான். ஒரு மனிதன் நன்றி மறக்கலாமா? துரோகம் செய்யலாமா?. ஓபிஎஸ்-ஐ எல்லோருக்கும் தெரியும், எடப்பாடியை யாருக்குத் தெரியும் சேலத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்தவர் தமிழகத்தில் ஒரு அமைச்சர் அவ்வளவுதான். அவரை முதல்வராக பரிந்துரை செய்தவர் டிடிவி தினகரன். அவரை முதல்வராக்கியவர் சசிகலா.
பரிந்துரை செய்த டிடிவிக்கும் துரோகம் செய்துவிட்டார், முதல்வராக்கிய சசிகலாவுக்கும் துரோகம் செய்துவிட்டார். நான்கரை வருடம் உறுதுணையாக இருந்த ஓபிஎஸுக்கும் துரோகம் செய்துவிட்டார். தாங்கிப் பிடித்த பிஜேபிக்கும் துரோகம் செய்துவிட்டார். எடப்பாடியிடம் நன்றி, உண்மை, விசுவாசம் என எதுவும் இல்லை, துரோகம் மட்டும்தான் உள்ளது.
இரட்டை இலை சின்னத்துக்காக பாடுபட்டவர்களில் ஒருவர் நான். ஜெயலலிதா எத்தனையோ தேர்தல்களை சந்திக்கும்போது இதே சோழவந்தானில் இரட்டை இலைக்காக வாக்குகள் சேகரித்தோம். ஆனால் இன்று, இரட்டை இலைக்கு எதிராக பேச வேண்டிய நிலைக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார், சிவி சண்முகம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்தான் காரணம். இரட்டை இலையை மீட்க வேண்டிய நிலை தற்போது உள்ளது. அவர்கள் ஒன்றாக இருந்திருந்தால் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்திருக்க முடியுமா? பாரதிய ஜனதாவின் ஆலோசனையை அவர்கள் கேட்டிருந்தால் அனைவரும் ஒன்றாகி இருந்திருப்போம் 2021ல் ஜெயலலிதாவின் ஆட்சி அமைந்திருக்கும், இந்த ஆட்சி பறிபோனதற்கு காரணம் எடப்பாடி தான்.
அடுத்தடுத்து வரும் தோல்விகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது எடப்பாடியால் தான். ஆகையால் இதை மாற்ற டிடிவி தினகரனை டெல்லி நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்.” என்று கூறினார்.