இன்டெல் நிறுவனம் உலகம் முழுவதும் கணினிகளுக்கான சிப்களை தயாரித்து விநியோகம் செய்து வருகிறது. அத்துடன், விற்பனையிலும் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில், இன்டெல் நிர்வாக துணைத் தலைவரும், தலைமை வணிக அதிகாரியுமான கிறிஸ்டோப் ஷெல், `இந்தியாவை ஆசியா – பசிபிக் பகுதியிலிருந்து வெளியே எடுத்துத் தனிப் பிராந்தியமாக்குகிறோம்’ எனக் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு இந்தியாவில் உள்ள நிறுவனமானது, ஆசிய பசுபிக் மற்றும் ஜப்பானின் (APJ) கீழ் இணைக்கப்பட்டு இருந்தது. பெங்களுருவில் நடைபெற்ற இன்டெல் ஏஐ உச்சிமாநாட்டில் பங்கேற்ற ஷெல் கூறுகையில், “நாங்கள் இப்போது இந்தியாவை ஆசியா பசிபிக் பகுதியிலிருந்து வெளியே எடுத்துத் தனிப் பிராந்தியமாக்குகிறோம். சொந்த பிராந்தியமாக இருக்கும் ஒரே நாடு இந்தியா.
இந்தியாவின் மார்க்கெட் உயர் வளர்ச்சிக்குச் செல்லும் திறனோடு மிகவும் தனித்துவமாக இருக்கிறது. அதனால் நான் இதைச் செய்கிறேன். நான் பேசும் அனைவருமே இது இந்தியாவுக்கான தருணம் என்று நம்புகிறார்கள்.
இரண்டாவது காரணம், நாங்கள் ஒரு என்ஜினீயரிங் கம்பெனி. நாங்கள் தீர்வுகளை (solutions) வடிவமைக்கிறோம் மற்றும் நான் இந்தியாவில் உள்ளதைப் போல, நாட்டில் என்ஜினீயரிங் டெப்த் கொண்டிருக்கும் நிறைய மார்க்கெட்கள் இல்லை. இந்தியாவில் எங்களிடம் 14,000 பொறியாளர்கள் உள்ளனர். அவர்கள் தயாரிப்புகள், அமைப்புகள் மற்றும் இன்டெல்லுக்கான தீர்வுகளை உருவாக்குகின்றனர். அவை இந்தியாவில் மட்டுமல்லமால் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன’’ என்று கூறியுள்ளார்.