`தலைவர் பதவியிலிருந்து ஆர்.கே.செல்வமணி உடனே விலக வேண்டும்!' – சூட்டைக் கிளப்பும் பெப்சி பஞ்சாயத்து

‘பெப்சி’ எனப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவராக இருக்கும் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உடனடியாக அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டுமென போர்க்கொடி தூக்கியுள்ளனர், பெப்சியில் அங்கம் வகிக்கும் சில சினிமா அமைப்புகளின் நிர்வாகிகள்.

இது தொடர்பாக பெப்சியில் அங்கம் வகிக்கும் 23 கிராஃப்ட்களில் ஒன்றான தென்னிந்திய சினிமா மற்றும் சின்னத்திரை அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன் யூனியனின் பொதுச் செயலாளர் தனபால் நம்மிடம் பேசினார்.

”பெப்சிங்கிறது 23 சினிமா கிராஃப்ட்களை உள்ளடங்கிய சினிமா அமைப்பு. நான் அந்த அமைப்பில் பல வருடங்களாக இணைச் செயலாளர் பொறுப்புல இருந்திருக்கேன். விஜயன் முதல் பல தலைவர்களுடன் இணைஞ்சு நான் பணி புரிஞ்சுகிட்டு வந்திருக்கேன்.

அமைப்பின் பேர் என்னவோ, திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம்தான். ஆனா சினிமாவின் கேப்டன்னு சொல்லப்படுகிற இயக்குநர்களைப் பொறுத்தவரைக்கும் சினிமாவின் மத்த தொழிலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் யாராவது பெப்சியின் தலைமைப் பொறுப்புக்கு வர்றாங்கன்னா, அதை விரும்பவே மாட்டாங்க. ‘நாம இயக்குநர். இவங்களுக்குக் கீழ் செயல்படுறதா’ங்கிற அந்த ஈகோதான் காரணம். ஆனா பெப்சியின் ‘பை லா’வின் படி 23 கிராஃப்ட்கள்ல எந்தவொரு அமைப்புல தலைவர், செயலாளர், பொருளாளரா இருக்காங்களோ அவங்க பெப்சி தலைவராகலாம். முன்னாடி தலைவர்களா இருந்த பலர் இந்த அமைப்புக்கும் அதன் மூலம் சினிமாவில் பல்வேறு கிராஃப்ட்களில் ஒர்க் பண்ணி வரும் கலைஞர்களுக்கும் நிறைய நல்ல விஷயங்களைச் செய்திருக்காங்க. ஆனா ஆர்.கே. செல்வமணி தலைவரா வந்த பிறகு அமைப்பின் செயல்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமா மாறத் தொடங்கிடுச்சு.

இவர் தலைவரா வந்த பிறகு சங்கத்துல நிறைய முறைகேடு நடந்திருக்கறதா தெரியவந்திருக்கு. அதுக்கெல்லாம் சரியான ஆதாரங்களைத் திரட்டுகிற வேலை நடந்துகிட்டிருக்கு. ஆதாரங்கள் கைக்கு வந்ததும் என்ன நடவடிக்கை எடுக்கணுமோ அதை எடுக்கலாம்னு இருக்கோம்.

என்னைக் கேட்டா, பெப்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிற முறையையே தவறானதுன்னு சொல்வேன். 23 அமைப்புகளையும் சேர்த்துக் கணக்கிட்டா மொத்தமா சுமார் 25000 பேர் உறுப்பினர்களா இருப்பாங்க. ஆனா பெப்சி தலைவரைத் தேர்ந்தெடுக்க ஓட்டுப் போடுகிற தகுதி வெறும் 69 பேருக்குதான் இருக்கு. இது பெரிய பித்தலாட்டமில்லையா? 23 கிராஃப்ட்களின் தலைவர், செயலாளர், பொருளாளர் மட்டுமே ஓட்டுப் போட முடியும். தலைவர் பதவிக்கு போட்டியிடறவங்க தேர்தல் அறிவிப்பு வரப் போகுதுன்னா அதுக்கு முன்னாடியே இந்த 69 பேரைத் தனிப்பட்ட முறையில கவனிச்சு, அதன் மூலமா ஓட்டு வாங்கிடுறாங்க.

தனபால்

இப்ப ஆர்.கே. செல்வமணி தலைவரா இருக்கிற நிர்வாகத்துல மத்த பிரச்னையை விடுங்க, பை லா ப்படி அவர் தலைவராகவே தொடரக் கூடாதுங்கிறதுதான் எங்க கோரிக்கை. அதுக்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளைத் தொட்ங்கிட்டோம். திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் சமீபத்துல நடந்து முடிஞ்சது. அதுல தலைவர், செயலாளர், பொருளாளர்னு எந்தப் பதவியிலயும் செல்வமணி இல்லை. அதனால அவர் பெப்சி தலைவரா செயல்பட முடியாது. எங்களைப் போன்ற இன்னும் சில அமைப்புகளும் இந்தக் கோரிக்கையை வைக்கிறாங்க,. ஆனா அவங்க ஏனோ பெரிசா குரல் உயர்த்த தயங்கிட்டிருக்காங்க. ஆனா நாங்க இந்தப் பிரச்னையை விடப் போறதில்லை” என்கிறார் தனபால்.

தனபாலின் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆர்.கே.செல்வமணி என்ன சொல்கிறார்? அவரிடமும் பேசினோம்.

”எந்தவொரு சங்கத்துக்கும் உச்ச அதிகாரம் பொதுக்குழுவுக்குதான். அங்க ஒரு முடிவு எடுத்தாங்கன்னா அதுக்கு எல்லாரும் கட்டுப்பட்டுதான் ஆகணும். நான் இயக்குநர் சங்கத்துல தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு வரலைன்னா அதுக்கான காரணங்கள் எங்க சங்க உறுப்பினர்களுக்குத் தெரியும். மேலும் இயக்குநர் சங்கத் தலைவரா இருந்தப்போ பெப்சி தலைவரானேன். இப்ப திடீர்னு இயக்குநர் சங்கத் தேர்தல்ல போட்டியிடல. இந்தச் சூழல்ல எங்க சங்கப் பொதுக்குழு என்ன சொல்லுதோ அதுக்குக் கட்டுப்பட்டா போதும். எங்க சங்கப் பொதுகுழுவுல நான் பெப்சியில தலைவாரா தொடர அனுமதிச்சு ஒரு தீர்மானமே போட்டு அனுப்பியிருக்காங்க. அதுவே போதுமானது. மத்தபடி புகார் சொல்றவங்களைப் பத்தி எனக்குக் கவலை இல்லை. அமைப்புல இருந்து வெளியில போன சிலர் ஏதாவது பேசிட்டிருப்பாங்க. அதுக்கு நாம காது கொடுத்திட்டிருந்தா அது நமக்கு நேர விரயம்” என்கிறார் இவர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.