ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 12-ம் வகுப்பு மாணவியை, அவர் படித்துவந்த தனியார் பள்ளி நிர்வாகம் பொதுத்தேர்வெழுத அனுமதி மறுத்த சம்பவம், தற்போது வெளியில் தெரியவந்திருக்கிறது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில், சம்பந்தப்பட்ட மாணவி கடந்த ஆண்டு அக்டோபரில் தன்னுடைய மாமா உட்பட இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளானார். பின்னர், அதிலிருந்து மீண்டுவந்த மாணவி மீண்டும் பள்ளிக்குச் சென்றபோது ஆசிரியர்கள், `தற்போது வந்தால் பள்ளி சூழல் கெட்டுவிடும்’ என்று மாணவியிடம் கூறி, வீட்டிலிருந்தே படிக்குமாறு அனுப்பி அனுப்பிவைத்தனர்.
இதன் காரணமாக, வீட்டிலிருந்தே படித்துவந்த மாணவி கடந்த டிசம்பர் மாதம் பொதுத்தேர்வு தொடர்பாகப் பள்ளிக்குச் சென்றார். அப்போது ஆசிரியர்கள், இத்தனை நாள்கள் வகுப்புகளுக்கு வராமலிருந்ததால் பெயர் நீக்கப்பட்டுவிட்டது, அட்மிட் கார்டு கிடையாது எனக் கூறி மாணவியை அனுப்பிவிட்டனர். இதனால், வேறொரு பள்ளி ஆசிரியரை மாணவி சந்தித்தார். அவர், சைல்டு ஹெல்ப்லைன் நம்பரை (child helpline number) தொடர்புகொள்ளுமாறு மாணவியை அறிவுறுத்தினார்.
அதன்படி, சைல்டு ஹெல்ப்லைன் நம்பரைத் தொடர்புகொண்ட மாணவி, பள்ளியில் தனக்கு நேர்ந்ததைக் குறிப்பிட்டு குழந்தைகள் நல ஆணையத்துக்குப் புகார் கடிதம் எழுதவே, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து பேசிய குழந்தைகள் நல ஆணையத் தலைவர் அஞ்சலி சர்மா, “சிறுமியிடம் நான் பேசியபோது, தான் மனச் சோர்வடைந்திருப்பதாக அவர் கூறினார். ஏற்கெனவே 10-ம் வகுப்புத் தேர்வில் 79 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற இவர் நன்கு படிக்கக்கூடியவர். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வெழுத அனுமதிக்கப்பட்டிருந்தால், அதிலும் அவர் நல்ல மதிப்பெண் பெற்றிருப்பார்.
ஆனால், பள்ளியின் அலட்சியத்தால் தற்போது ஒரு வருடத்தை அவர் இழக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. எங்களுக்கு வந்த கடிதத்தின் நகல் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதோடு, குழந்தைகள் நல ஆணையமும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவிக்குத் தேவையான சட்டபூர்வ உதவி வழங்கப்படுவதை உறுதி செய்யவிருக்கிறது” என்று தெரிவித்தார். மேலும், தேர்வு முடிந்துவிட்டாலும் மாணவியைத் துணைத் தேர்வில் பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குழந்தைகள் நல ஆணையம் தெரிவித்திருக்கிறது.