“ஒரிஜினல் மலையாள படம்” : ஆடுஜீவிதத்தை பாராட்டிய ஜெயமோகன்
மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் பிளஸ்சி இயக்கத்தில் உருவான ஆடுஜீவிதம் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அரபு நாட்டில் ஆடு மேய்க்கச் சென்று பல சிரமங்களை சந்தித்த ஒரு இளைஞனின் வாழ்க்கையை மையப்படுத்தி எழுதப்பட்ட ஆடுஜீவிதம் என்கிற நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் மேக்கிங்கிற்காகவும் பிரித்விராஜின் நடிப்பிற்காகவும் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி தமிழிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தை பற்றி குடிகார பொறுக்கிகள் என காட்டமாக விமர்சித்திருந்த பிரபல எழுத்தாளரும் கதாசிரியருமான ஜெயமோகன், இந்த ஆடுஜீவிதம் படத்தை ஒரிஜினல் மலையாள சினிமா என மனம் விட்டு பாராட்டி உள்ளார்.
இந்த படம் குறித்து அவர் கூறும்போது, “இது போன்ற ஒரு படம் தமிழிலோ தெலுங்கிலோ, ஏன் வேறு எந்த இந்திய மொழிகளிலோ எடுக்கப்பட முடியாது. இதை பார்க்கும் தமிழ் ரசிகர்கள் போரடிக்கிறது என்று உடனே சொல்வார்கள். ஆனால் இந்த படம் வரப்போகும் தலைமுறைக்கான மலையாள கிளாசிக் படங்களில் ஒன்றாக கருதப்படும். முன்பு பெங்காலி படங்களில் இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் சமீப காலமாக ஹிந்தியின் ஆதிக்கத்தால் பெங்காலி கலாச்சாரம் சிதைக்கப்பட்டிருக்கிறது. எந்தவித செயற்கைத்தனமும் இல்லாத மனிதத்தை மட்டுமே பேசுகின்ற இந்த ஆடுஜீவிதம் ஒரே நிஜமான ஒரிஜினலான மலையாள படம் என்று பாராட்டியுள்ளார் ஜெயமோகன்.