- வலுவான பொருளாதாரத்துடன், நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழல் இன்று நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
- இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலை மேலும் வலுப்படுத்தி தேசிய பொருளாதாரத்திற்கு உயர் பங்களிப்பை பெற எதிர்பார்க்கிறோம்- ஜனாதிபதி.
கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் நாட்டில் முன்னெடுத்த சரியான தீர்மானங்களினால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதுடன் இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஆனால், நாட்டின் பொருளாதாரம் இன்னும் தொங்குபாலத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை வெற்றிபெறும் வரை தொடர்ந்து செல்வதா அல்லது அந்த வேலைத்திட்டத்தை விட்டுவிட்டு நாட்டை மீண்டும் அதலபாதாளத்தில் தள்ளிவிடுவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வருமானம் 50% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, வலுவான பொருளாதாரத்துடன் நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான பின்னணி நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
சர்வதேச இரத்தினக்கல் , ஆபரண வர்த்தக நிலையத்தை (இரத்னபுரி இரத்தினக்கல் கோபுரம்) நேற்று (04) காலை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இரத்தினபுரியின் தெமுவாவத்த பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மாணிக்கக்கல் கோபுரத்தை இரண்டு கட்டங்களாக நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக 3650 இலட்சம் ரூபா செலவில் ஐந்து மாடிக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த கோபுரத்தின் இரண்டாம் கட்டமாக 14 மாடிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், இதற்காக 4500 இலட்சம் ரூபா செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையம் 27 வணிக வளாகங்களை உள்ளடக்கியதுடன், அதில் 17 வணிக வளாகங்கள் உள்ளூர் வர்த்தகர்களுக்கும் 10 வணிக வளாகங்கள் வெளிநாட்டு வர்த்தகர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.
தேசிய இரத்தினங்கள் மற்றும் ஆபரணக் கூட்டுத்தாபனத்தின் நிதி இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதோடு இது வர்த்தகர்களையும் விற்பனையாளர்களையும் ஒரே கூரையின் கீழ் இணைக்கும் ஒரு சர்வதேச இரத்தினம் மற்றும் ஆபரண வர்த்தக மையமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இரத்தினங்கள் மற்றும் ஆபரண விற்பனைக்கான ஆசியாவின் முன்னணி விற்பனை மையங்களான பெங்கொக் மற்றும் ஹாங்கொங்கில் உள்ளதைப் போன்ற சுயாதீன தர சோதனை சேவைகள், ஆய்வக சேவைகள் மற்றும் வங்கி மற்றும் ஏற்றுமதி சேவைகளும் இங்குள்ளது.
நினைவுப்படிகத்தைத் திரைநீக்கம் செய்து, சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தக நிலையத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு களவிஜயத்திலும் ஈடுபட்டார்.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது. விருந்தினர் புத்தகத்தில் நினைவுக் குறிப்பு ஒன்றையும் ஜனாதிபதி பதிவிட்டார்.
இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு உயர் பங்களிப்பை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், வழங்கக்கூடிய நிவாரணங்கள் குறித்த அறிக்கையை இந்த ஏப்ரல் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து இரத்தினக்கல் அகழ்வோர்களும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பயனடைய வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இன்று திறந்துவைக்கப்படவுள்ள சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையத்தின் ஊடாக இலங்கையின் இரத்தினக்கற்களுக்கு சர்வதேச ரீதியில் உரிய பெறுமதியை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைக்கு மாற்ற முடியும் என ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:
இந்த சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண நிலையத்தின் பணிகள் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியின் போது ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன், இந்த நிலையத்தை நிர்மாணிப்பதற்காக தம்மை அர்ப்பணித்த அமைச்சர்களான லொஹான் ரத்வத்த மற்றும் சாமர சம்பத் ஆகியோரை நாம் நினைவுகூர வேண்டும்.
இந்த நிலையம் இரத்தினபுரிக்கு மட்டுமல்ல, இது நாட்டிலேயே ஒரு பாரிய இரத்தினம் மற்றும் ஆபரண மையமாக மாறும். இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை மேலும் முன்னேற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தேசிய பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும். கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார சரிவு காரணமாக, கடந்த 2021-2022 காலகட்டத்தில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் தொழிலும் பல சிரமங்களை எதிர்கொண்டது. 2023 ஆம் ஆண்டில், இந்தத் துறையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது. அந்த பங்களிப்பும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பலமாக அமைந்தது என்றே கூற வேண்டும்.
மேலும் வரி அதிகரிப்பால் இரத்தினம் மற்றும் ஆபரணத் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் அண்மையில் என்னுடன் கலந்துரையாடப்பட்டது. அதன்படி, இந்த ஏப்ரல் இறுதிக்குள் வழங்கக்கூடிய நிவாரணங்கள் குறித்து ஆலோசித்து அறிக்கை சமரப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், எதிர்காலத்தில், இந்தத் துறையில் இருந்து குறைந்தபட்சம் 02 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுவதை இலக்காகக் கொள்ள வேண்டும். இந்தத் துறையை மேம்படுத்தும் போது, இரத்தினச் சுரங்கத் தொழிலாளிகளுக்கும் அதன் நன்மை கிடைக்க வேண்டும்
இரு வருடங்களாக மிகவும் நெருக்கடியுடன் நாட்டை கொண்டுச் சென்றோம். இதன்போது வரி அதிகரிப்பு உள்ளிட்ட கடினமான தீர்மானங்களை முன்னெடுத்தோம். இன்றைய பிரதிபலன்களை பார்க்கும் போது நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான சூழல் உருவாகியுள்ளது.
ஜூலை 2022 இல் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி 7.4 என்ற மறைப் பெறுமானத்தை காட்டியது. ஆனால் 2024 இல் 4.5 என்ற நேர் பெறுமானத்தை காண்பிக்கிறது.இரண்டு வருடங்களில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் இந்தக் கஷ்டங்களைச் சகித்துக்கொண்டதாலே இந்த மாற்றம் ஏற்பட்டது.
2022 ஜூலை மாதமளவில் 54.6% ஆக காணப்பட்ட பணவீக்கம் இன்று 9% ஆக குறைத்திருப்பதால் ரூபாய் வலுவடைகிறது. அன்று 23.8% ஆக காணப்பட்ட வங்கி வட்டி 10.3% ஆக குறைவடைந்துள்ளது. இதனை இன்னும் சில மாதங்களில் மேலும் குறைக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அன்று 361 ரூபாயாக காணப்பட்ட டொலரின் பெறுமதி இன்று 300.4 ஆக குறைந்திருக்கிறது. அதனை 280 ரூபாய் வரையில் மட்டுப்படுத்திகொள்ளவே முயற்சிக்கிறோம். அதனால் ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடையும்.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் 50% ஆக அதிகரித்துள்ளது. அதனால் சமூக சேவைகளுக்கான செலவு மூன்று மடங்கினால் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், தற்போது கடன் மறுசீரமைப்பு பணிகளை இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. உள்நாட்டுக் கடன் குறித்து ஆலோசித்து வருகிறோம். அடுத்த கட்டமாக எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் உடன்படிக்கைக்கு வரவேண்டும். இந்தப் பணியைத் தொடர்வதற்கான இலக்குகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியமும் அரசாங்கமும் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்.
அரசாங்கக் கடன் தற்போது மொத்த தேசிய உற்பத்தியில் 128% ஆக காணப்படுகிறது. 2032 ஆம் ஆண்டுக்குள் அதனை 95% ஆக குறைக்க வேண்டும். தற்போது, மொத்த தேசிய உற்பத்திக்கு மேலதிகமாக 35% வருமானத்தை ஈட்ட வேண்டும். 2032 ஆம் ஆண்டுக்குள் அதனை 13% ஆக குறைக்க வேண்டும். மேலும், மொத்த தேசிய உற்பத்தியில் 9.4% ஆக காணப்படும் வெளிநாட்டுக் கடன்களை2025 ஆம் ஆண்டிலிருந்து 2.3% உபரியாக மாற்றிக்கொள்ள முயற்சித்தல் உள்ளிட்ட இலக்குகளை நோக்கி நகர வேண்டும்.
இந்த நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கினால், எங்களுக்கு கடன் வழங்கிய நாடுகள், “நீங்கள் விதிமுறைகளை மீறிவிட்டீர்கள், எனவே கடனைத் திருப்பித் தாருங்கள்” என்று அறிவிக்கும். ஆனால் இந்த வேலைத்திட்டம் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மேலும் இந்த முறை பெரும்போகத்தில் சிறந்த அறுவடையை பெற முடிந்தது. தமிழ், சிங்களப் புத்தாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம். மேலும், அஸ்வெசும திட்டத்தின் ஊடாக மக்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இம் மாதமும் அடுத்த மாதம் மேலும் 20 கிலோ அரிசி வழங்கப்படும். பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி வழங்கப்பட்டிருப்பதால் கிராமரிய பொருளாதாரம் எழுச்சி கண்டுள்ளது.
இன்று, சுற்றுலா வியாபாரம் அதிக வருமானத்தை ஈட்டுகிறது. மேலும், அன்னிய செலாவணி நாட்டிற்கு மீண்டும் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் இன்று நாட்டு மக்களின் வருமான நிலை மீண்டு வலுவடைய ஆரம்பிக்கிறது.
நெருக்கடி காலத்தில் முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் இருக்கவில்லை. மின்சாரம் இருக்கவில்லை. இன்று போதியளவு எரிபொருள் உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் முச்சக்கரவண்டி சாரதிகளின் வருமானமும் அதிகரித்துள்ளது. இன்று முச்சக்கர வண்டிகளில் போஸ்டர் ஒட்டி அரசியல் செய்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களில் உரிய நடவடிக்கையை நாம் எடுக்காமல் இருந்திருந்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்காது.
இந்த பொருளாதாரத்தை பாதுகாத்து முன்னேறிச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் வீழ்வோம். நாம் இன்று தொங்குபாலத்தின் நடுவில் நிற்கிறோம். வீழ்வதா? மீள்வதா? என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
கைத்தொழில் அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன,
2021 ஆம் ஆண்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையம் இன்று பொதுமக்களிடம் கையளிக்கப்படுகிறது. இரத்தினக்கல் வர்த்தகர்களுக்கு அத்தியாவசியமாக காணப்பட்ட இந்த கட்டிடம் திறக்கப்பட்டதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி விரைவாகப் பெருகும்.
இரத்தினக்கல் வியாபாரிகள் எதிர்நோக்கும் பல்வேறு சிரமங்கள் குறித்து இம்மாவட்டத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர். அதற்கு விரைவான தீர்வுகளை வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். இந்த வியாபார நிலையத்தின் ஊடாக வருடத்திற்கு இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது அதனை விடவும் அதிகமான வருமானம் ஈட்டு முடியுமென என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு இரத்தினக் கல் கூட இல்லாத ஹொங்கொங் இராச்சியம், இரத்தின கற்களை மீள் ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டுக்கு 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுகிறது. அதேபோல் தாய்லாந்து வருடாந்தம் 06 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுகிறது. ஆனால் இரத்தினங்கள் நிறைந்த நாடான இலங்கையில் வருமானம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது.
அதனால் தாய்லாந்து மற்றும் ஹொங்கொங் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சுதந்திர வர்தக முறைமைகளை பலப்படுத்துவது காலோசிதமானதாக அமையும். ஜனாதிபதியும் அந்த பொருளாதார முறைமைகளை ஏற்றுகொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்தரா வன்னியராச்சி,
இரத்தினபுரிக்கு மிகவும் அவசியமானதாக காணப்பட்ட இரத்தினக்கல் வியாபார நிலையம் திறக்கப்பட்டமை பொருளாதாரத்திற்கு பலனளிக்கும். கடந்த காலத்தில் இரத்தினக்கல் வர்க்கர்கள் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தனர். பொருளாதார நெருக்கடியால் வங்கி விட்டி விகிதம் 30% ஆக அதிகரித்தமையால் நெருக்கடி வலுவடைந்தது.
ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வந்ததும் முன்னெடுத்த பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாக இரத்தினக்கல் வியாபாரிகளுக்கு மாத்திரமின்றி மக்களுக்கும் சுமூகமான காலம் உதயமானது. இன்று இரத்தினபுரிக்கு சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையம் கிடைத்துள்ளதுடன் நாட்டின் பொருளாதாரத்தை நல்லதொரு நிலைக்கு கொண்டு வரவும் ஜனாதிபதியால் முடிந்துள்ளது.
அஸ்வசும திட்டத்தின் மூலம் 20 லட்சம் வறிய குடும்பங்கள் பாதுகாக்கப்படுகின்றன. உறுமய வேலைத்திட்டத்தின் ஊடாக மக்களின் காணி உரிமையை ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார். சரிவிலிருந்து நாட்டை மீட்டு மக்களை வாழ வைக்கும் பொறுப்பை சரியாகச் செய்துள்ளார். அனுபவமிக்க தலைவர் நாட்டுக்கு தேவை என்பதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த இரண்டு வருடங்களில் எடுத்துக்காட்டியுள்ளார்.
ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க,
இன்று திறந்து வைக்கப்படவுள்ள சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையம் இரத்தினபுரிக்கு மாத்திரமன்றி முழு நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வழி செய்யும். இதன் மூலம் இரத்தினபுரியின் இரத்தினக்கல் வர்த்தக சமூகத்தை ஒழுங்குபடுத்தி ஒரே கூரையின் கீழ் கொண்டு வந்து வருமானம் ஈட்டும் வீதத்தை அதிகரிக்க முடியும். இந்த நிலையத்தில் இரத்தின வியாபாரத்திற்கான சகல வசதிகளும் உள்ளன.
இன்று ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப் பார்க்கும் போது பொருளாதாரக் மீட்சி பற்றிய விடயங்களை காண முடிகிறது. 2022 ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது நாட்டடை மீட்க முன்வராத அரசியல் தலைவர்கள் இன்று நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிப்பது வேடிக்கையானது. வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை உரிய முறையில் அபிவிருத்தி செய்ய முடியாதவர்கள் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்புவது என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.டீ.ஜே.செனவிரத்ன,
இலங்கை வரலாற்றுக் காலத்திலிருந்தே இரத்தினக் கற்களுக்கு பெயர் பெற்றிருந்தது. அதற்கான பெறுமதி சேர்ப்பதற்கான சரியான திட்டம் எம்மிடம் இருக்கவில்லை.முதல் தடவையாக எமது இரத்தினக் கற்களை உலகிற்கு கொண்டுச் செல்வதற்கான மத்திய நிலையம் திறக்கபட்டிருக்கிறது. இதன் மூலம் சர்வதேச அளவில் இலங்கையின் இரத்தினங்களை சரியான விலைக்கு விற்று பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும்.
இந்த சர்வதேச வர்த்தக நிலையத்தின் நிர்மாணப் பணிகள் 2012 இலிருந்து திட்டமிடப்பட்டன. பல்வேறு தடைகளுக்கு மத்தியில் இன்று முதல் முழுக் கட்டிடமாக சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையத்தை மக்களுக்கு கையளிக்க முடிந்துள்ளமை வர்த்தக சமூகத்துக்கும் நாட்டுக்கும் கிடைத்த வெற்றியாகும்.
ஊவா பல்கலைக்கழகத்தின் வேந்தர் பெங்கமுவே தம்மதின்ன நாயக்க தேரர், இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, ஜானக வக்கம்புர, பாராளுமன்ற உறுப்பினர்களான அகில எல்லாவல, காமினி வலேபொட, சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க, தேசிய இரத்தினக்கல், ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் சில்வா, இரத்தினக்கல் வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.