காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 2024 – முக்கிய வாக்குறுதிகள்: மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வெள்ளிக்கிழமை வெளியிட்டனர். இந்நிகழ்வில் ப.சிதம்பரம், பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நீதி என்பதை முன்னிறுத்தி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும்; NEET, CUET போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம்; குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும்; எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு 50% என்ற உச்ச வரம்பை நீக்கும் வகையில் சட்டத் திருத்தம்; பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும் முதலான வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
மேலும், பட்டியலினத்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோகித் வெமுலா சட்டம் கொண்டுவரப்படும்; தேசிய கல்வி கொள்கையானது, மாநில அரசுகளின் ஆலோசனைகளுக்கு பிறகே நடைமுறைப்படுத்தப்படும். 2025-ம் ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு; ST, ST, OBC பிரிவினருக்கான காலிப் பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்; ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும் ஆகிய வாக்குறுதிகளையும் காங்கிரஸ் அளித்துள்ளது.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறை கொண்டுவரப்படாது; நூறு நாள் வேலைத் திட்ட ஊதியம் ரூ.400 ஆக உயர்வு; மாணவர்களுக்கான கல்வி கடன்கள் ரத்து;
ராணுவச் சேர்க்கைக்கான ‘அக்னி பாத்’ திட்டம் ரத்து செய்யப்படும்; பெண்களுக்கான ஊதியத்தில் உள்ள பாகுபாட்டை தவிர்க்க ‘ஒரே வேலை, ஒரே ஊதியம்’ திட்டம்; ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டணச் சலுகை ஆகிய வாக்குறுதிகளும் கவனம் பெற்றுள்ளன.
அதேபோல், பாஜக 10 ஆண்டுகளில் கொண்டுவந்த மக்கள் விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்படும்; புதுச்சேரி மற்றும் ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து; ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து; பணமதிப்பிழப்பு, ரபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திர திட்டம் உள்ளிட்டவை குறித்து விசாரணை; தனிநபர் வருமான வரி ஒரே விதமாக நிலையாக இருக்கும் வகையில் சட்டம்; LGBTQIA+ நல சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு, அங்கீகரிக்க சட்டம் கொண்டுவரப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்…” – அடுக்கிய ப.சிதம்பரம்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குழுவின் தலைவரான ப.சிதம்பரம், “இந்த தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சம் ‘நீதி’. கடந்த 10 ஆண்டுகளில் அதிலும் குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு வகையான நீதியும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது, பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது, சில விஷயங்களில் மறுக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் யாரெல்லாம் ஒதுக்கப்பட்டார்களோ அவர்களுக்கு நீதி வழங்கும்வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. work, wealth, welfare என்ற அடிப்படையில் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மக்கள் நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி வழங்கும்” என்று தெரிவித்தார்.
“பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு” – ராகுல்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க முயற்சிக்கும் சக்திகளுக்கும், அவற்றைப் பாதுகாக்கும் சக்திகளுக்கும் இடையிலான தேர்தல் இது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவோம்.
கடந்த 2004-ல் செய்தது போல், ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற கருத்து தற்போது பரப்பப்படுகிறது. அந்த பிரச்சாரத்தில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். கொள்கை அடிப்படையிலான தேர்தல் இது. பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை: வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. முந்தைய அளவான 6.5 சதவீதத்திலேயே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்துள்ளார். இதனால் வீடு, வாகனக் கடன்களுக்கான மாதாந்திர தவணையில் எவ்வித மாற்றமும் இருக்காது.
ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு அனுமதி உண்டா?: ரயில்வே ஊழியர்களுக்கு தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம், தெற்கு ரயில்வே பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜகவின் 2019 தேர்தல் வாக்குறுதிகள் – மோடி விளக்கம்: கடந்த 2019-ல் பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் சுரு நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பாஜக கண்டிப்பாக சொல்வதைச் செய்யும். மற்ற கட்சிகளைப் போல பாஜக வெறும் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில்லை. நாங்கள் உறுதிப் பத்திரம் வழங்கி வருகிறோம். 2019 உறுதிப் பத்திரத்தில் நாங்கள் கூறிய பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
‘தி கேரளா ஸ்டோரி’யை டிடியில் ஒளிபரப்ப கேரளாவில் எதிர்ப்பு: சர்ச்சைக்குரிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை ஒளிபரப்பும் முடிவை அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷன் சேனல் கைவிட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். மேலும், அரசுத் தொலைக்காட்சி சேனலானது பாஜக – ஆர்எஸ்எஸ் பிரச்சார இயந்திரமாக மாறக் கூடாது என்று அவர் கண்டித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் இடைகாலத் தடை: உத்தரப் பிரதேச மதரஸா கல்விச் சட்டம் 2004 அரசமைப்பு சாசனத்துக்கு எதிரானது என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதன்படி, உத்தரப் பிரதேசத்தில் மதரஸாக்களில் பயிலும் 17 லட்சம் மாணவர்கள் மற்றும் 10,000 மதரஸா ஆசிரியர்களையும் மாநிலக் கல்வி முறைக்கு மாற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
“கச்சத்தீவு விவகாரத்தில் வெளியாகும் தகவல்களில் ஆதாரமில்லை”: “கச்சத்தீவை இலங்கையிடம் இருந்து மீட்பது குறித்து இந்தியாவில் இருந்து வெளியாகும் தகவல்களில் எந்த ஆதாரமும் இல்லை” என்று இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
தமிழகத்தில் 40+ இடங்களில் வருமான வரித் துறை சோதனை: 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ளது. தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதை தவிர்க்கும் வகையில், வருமான வரித் துறை கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் சென்னை உட்பட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமையில் சோதனை மேற்கொண்டனர்.
தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்படி இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசின் 8 முன்னணி ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. குறிப்பாக, குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது.
“ஆம் ஆத்மியை ஒருங்கிணைக்க சுனிதா கேஜ்ரிவாலே சிறந்தவர்”: “அரவிந்த் கேஜ்ரிவாலின் செய்தியை தற்போது சுனிதா கேஜ்ரிவால் வழங்கி வருகிறார். இது கட்சியினர் மத்தியிலும் ஆதரவாளர்கள் மத்தியிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை நாங்கள் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். தற்போதைய சூழலில் ஆம் ஆத்மி கட்சியை ஒருங்கிணைக்க சுனிதா கேஜ்ரிவால்தான் சிறந்த நபர்” என அக்கட்சியின் முக்கியத் தலைவரும், டெல்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் கேள்வி: “அரசியல் சாசனத்தை மாற்ற விரும்பவில்லை என பிரதமர் மோடி தெளிவுபடுத்துவாரா?” என காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக ஜெயராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அடுத்தடுத்த பாஜக தலைவர்களின் இத்தகைய கருத்துகள், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய ஜனநாயகம் எப்படி இருக்கும் என்ற கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் சாசனத்தை மாற்ற விரும்பவில்லை என்று தெளிவுபடுத்தும் அறிக்கையை பிரதமர் வெளியிடுவாரா?” என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூரு குண்டுவெடிப்பு – என்ஐஏ புதிய தகவல்: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது பெயர் முசாவிர் ஹூசைன் சாஹிப். இந்த சதிச் செயலில் உடந்தையாக இருந்தவர் அப்துல் மதீன் தாஹா. இருவருமே கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தின் தீர்த்தஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிவித்துள்ளது.
“விலைவாசி உயர்வே மத்திய, மாநில அரசுகள் அளித்த பரிசு”: “மின் கட்டணம், சொத்து வரி, அத்தியாவசியப் பொருட்கள், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர், தங்கம் விலை உயர்வு… இப்படி எண்ணற்ற விலை உயர்வுகளைத்தான் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்குப் பரிசாக கொடுத்துள்ளனர்” என்று சென்னையில் நடந்த பிரச்சாரத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார்.
“முல்லை பெரியாறு குறித்து சு.வெ குரல் எழுப்பாதது ஏன்?”: ”முல்லைப் பெரியாறு விவகாரத்தில் ஐந்து ஆண்டுகளில் ஒரு முறைகூட சு.வெங்கடேசன் எம்.பி மதுரை மக்களுக்காக குரல் கொடுக்காதது ஏன்?” என்று அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் கேள்வி எழுப்பியுள்ளார்.