சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல் இந்திரா நகரில் பிரச்சாரம் செய்த விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகாவிடம், “கழிப்பறை இல்லை” என பெண்கள் புகார் அளித்த நிலையில், “என்னை வெற்றி பெற வைத்தால், சொந்த செலவில் சுகாதார வளாகம் கட்டித் தருவேன்” என வாக்குறுதி அளித்தார்.
சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராதிகா பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “சிவகாசி பகுதியில் பட்டாசு முக்கிய தொழிலாக உள்ளது. பட்டாசு பிரச்சினை தொடர்பாக இறுதி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
நான் சிவகாசி பகுதியில் உள்ள பெரும்பாலான பட்டாசு ஆலைகளுக்குச் சென்று தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு வருகிறேன். தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு எம்பி கூட இல்லாத போதும், சீன லைட்டர்களால் தீப்பெட்டி தொழிலுக்கு பிரச்சினை வந்த போது, உடனடியாக பாஜக அரசு, லைட்டர்களுக்கான வரியை உயர்த்தி, அத்தொழிலை காப்பாற்றியது.
பட்டாசு தொழிலை காப்பாற்ற பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் எண்ணற்ற உதவிகளை செய்து உள்ளனர். இண்டியா கூட்டணி பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அதிமுக, தேமுதிக கூட்டணி மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத போது, அவர்களால் எப்படி மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
திறமையான, நேர்மையான ஊழலற்ற ஆட்சி அமைய பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும். நீங்கள் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் நான் ஒரு பாலமாக இருந்து மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் உங்களுக்கு கொண்டு வருவேன். மற்றவர்கள் சொல்வதை நம்ப வேண்டாம், நான் விருதுநகரில் தங்கி இருந்து உங்களுக்காக சேவை செய்வேன்” என்றார்.
திருத்தங்கல் இந்திரா நகரில் ராதிகா பிரச்சாரம் செய்தபோது, “கழிப்பறை இல்லை” என பெண்கள் புகார் தெரிவித்தனர். அதற்கு “தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பில் நாடு முழுவதும் சுகாதார வளாகங்கள் கட்டப்படும் நிலையில், அதை கூட முறையாக செயல்படுத்த கூட மக்கள் பிரதிநிதிகளுக்கு மனமில்லை. நான் வெற்றி பெற்றால் எனது சொந்த செலவில் சுகாதார வளாகம் கட்டி தருவேன்” என ராதிகா உறுதி அளித்தார்.