ஆடுஜீவிதம் சர்ச்சை : இயக்குனர் விளக்கம்
தேசிய விருது பெற்ற மலையாள இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'ஆடு ஜீவிதம்'. பிரபல மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய 'ஆடு ஜீவிதம்' என்ற நாவலை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் அமலா பால், ஜிம்மி ஜீன், கே.ஆர்.கோகுல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 29-ம் தேதி வெளியான இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
கேரளாவை சேர்ந்த நஜீப் என்பவர் வேலைக்காக அரபு நாட்டுக்கு சென்றபோது அங்கு கொத்தடிமையாக்கப்பட்டார். கொடும் பாலைவனத்திலிருந்து அவர் எப்படி மீண்டு வந்தார் என்பதுதான் படத்தின் கதை. இது ஒரு நிஜ கதை. ஆடுஜீவிதம் படத்தில் ஆடுகளுடன் நெருக்கம் காட்டியதாக காட்சிகள் இருந்ததாகவும், ஆனால் தணிக்கை குழு நீக்கி விட்டதாகவும் செய்தி பரவ இது சர்ச்சை ஆனது.
இதுகுறித்து இயக்குனர் பிளஸ்சி கூறியிருப்பதாவது: இது தேவையில்லாத சர்ச்சை. யாராவது வேண்டுமென்றே இந்த வதந்திகளை உருவாக்குகிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. பார்வையாளர்கள் இதுபோன்ற வதந்திகளில் இருந்து விலகி இருப்பார்கள் என்று நம்புகிறேன். பென்யாமின் எழுதிய அனைத்து விவரங்களையும் சொல்வதற்கு பத்து படங்கள் தேவைப்படும் என்பதால் நாவலில் இருந்து 43 பக்கங்களை மட்டுமே எடுத்தேன். நாவலில் பென்யாமின் நஜீப்பை சித்தரித்தது வேறு. நஜீப் மீதான என் பார்வை வேறு.
ஆட்டுடன் உறவு கொள்வது போன்ற எந்த ஒரு காட்சியும் படமாக்கப்படவில்லை. அதை சென்சார் போர்டும் நீக்கவில்லை. இதுபோன்ற காட்சிகள் தொடர்பாக நிறைய விவாதம் இருந்தது. ஆனால் என் நஜீப் இதுபோன்ற செயல்களை செய்யமாட்டார் என்பதில் நான் தெளிவாக இருந்தேன். என்று கூறியுள்ளார் பிளஸ்சி.