ICC T20 World Cup 2024 Team India Selection: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணிகளும் குறைந்தபட்சம் 3 போட்டிகளையும், அதிகபட்சமாக சில அணிகள் 4 போட்டிகளையும் விளையாடிவிட்டன. 10 அணிகளும் தலா 14 போட்டிகள் வரை விளையாடும். லீக் சுற்று முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும். மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர் மே 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
2 மாத காலம் நடைபெறும் இந்த பெரும் தொடரில் இறுதிப்போட்டியையும் சேர்த்து மொத்தம் 74 போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் தற்போது 18 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. தற்போதைய நிலவரப்படி ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை தோல்வியே தழுவாமல் பலத்துடன் காணப்படுகிறார்கள். மறுபுறம் மும்பை அணியோ இன்னும் தனது முதல் வெற்றியை பெற போராடி வருகிறது. டெல்லி, பெங்களூரு, அணிகள் தலா 1 போட்டியை மட்டுமே வென்று 3 போட்டிகளில் தோலிவயடைந்துள்ளன.
ஐபிஎல் தொடரை கணிப்பது கடினம்…
நடப்பு சாம்பியன் சிஎஸ்கே, லக்னோ, ஹைதராபாத், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட அணிகள் தலா 2 வெற்றியை பெற்றுள்ளன. தொடரின் நிலவரம் எந்த நேரத்திலும் தலைக்கீழாக மாறலாம் என்பதால் எந்தெந்த அணிகள் பிளே ஆப் முன்னேறும் என்பது யாராலும் கச்சிதமாக கணிக்க முடியாது எனலாம். அதுதான் ஐபிஎல் தொடரின் (IPL 2024) சுவாரஸ்யமே. அதேபோல்தான் எந்த வீரர் இறுதிப்போட்டி வரை அதிரடியாக விளையாடுவார் என்பதையும் யாராலும் கணிக்க இயலாது. தொடரின் ஆரம்பத்தில் நன்றாக விளையாடும் ஒருவர், பிற்பகுதியில் சொதப்பவும் அதிக வாய்ப்பிருக்கிறது.
அந்த வகையில், ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு லீக் போட்டியும் மீது பலத்த எதிர்பார்ப்பு இருக்கும். குறிப்பாக, நடப்பு ஐபிஎல் தொடர் முடிவடைந்து ஐந்து நாளுக்கு பின் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை, இம்மாத இறுதிக்குள் இந்திய அணி (Team India) அறிவிக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், வீரர்கள் தேர்வு என்பது ஐபிஎல் தொடரில் அவர்களின் செயல்பாட்டையும் பார்த்துதான் நடைபெறும். எந்தெந்த வீரர்கள் உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.
ரோஹித் சர்மா கேப்டன்?
இதில் தற்போது இருந்தே பல கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களின் கணிப்புகளை வெளியிட தொடங்கிவிட்டனர். ரோஹித் சர்மாதான் (Rohit Sharma) ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு (ICC T20 World Cup 2024) கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சில நாள்களுக்கு முன் பொதுவெளியிலேயே அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலும் ரோஹித் கேப்டனாகவே செயல்பட்டார். ஆனால், அதற்கு முன் அவர் 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பையில்தான் சர்வதேச டி20இல் விளையாடியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
யார் யாருக்கு இடம்?
ரோஹித் சர்மா ஒருபுறம் இருக்க விராட் கோலி (Virat Kohli), ஜடேஜா, கேஎல் ராகுல், பும்ரா ஆகியோரில் யார் யார் டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவார்கள் என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் உள்ளது. ஓப்பனிங்கில் ஜெய்ஸ்வால் உள்ளார் என்பதால் சுப்மான் கில்லுக்கு இடமிருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. விக்கெட் கீப்பரில் ரிஷப் பண்ட் வருவார் என கூறப்படும்பட்சத்தில் இஷான் கிஷன், ஜித்தேஷ் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோரின் நிலை என்ற கேள்வியும் உள்ளது.
மேலும், திலக் வர்மா மிடில் ஆர்டரில் நல்ல செயல்பட்டு வருகிறார். ஃபினிஷிங்கிற்கு ரிங்கு சிங் உள்ளார். இதில் ஹர்திக் பாண்டியா, தூபே ஆகியோரை எப்படி பொருத்துவது என்றும் யோசிக்க வேண்டும். இத்தனை குழப்பங்கள் நீடிக்கும் நிலையில் இதற்கான பதில் அஜித் அகர்கர் கையில்தான் உள்ளது. இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும் (Yuvaraj Singh) டி20 உலகக் கோப்பை இந்திய அணி தேர்வுக்கு தனது பரிந்துரையை கொடுத்துள்ளார்.
யுவராஜ் சிங்கின் பரிந்துரை
நேற்றைய சன்ரைசரஸ் ஹைதராபாத் – சென்னை சூப்பர் கிங்ஸ் (SRH vs CSK) போட்டியின் போது தனது X தளத்தில்,”பீல்ட் செட்அப்பை எளிதாக முறியடித்து சிவம் தூபே (Shivam Dube) பவுண்டரிகளை அடிப்பதை பார்க்க நன்றாக இருக்கிறது. அவர் டி20 உலகக் கோப்பை ஸ்குவாடில் இடம்பெற வேண்டும் என நினைக்கிறேன். ஆட்டத்தையே மாற்றக்கூடிய வல்லமை அவரிடம் இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.