இஸ்ரேலை தாக்க போகிறோம்; ஒதுங்கி இருங்கள்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

தெஹ்ரான்,

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் ஈரான் தூதரகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் மீது, இஸ்ரேல் சில நாட்களுக்கு முன் திடீரென வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த சம்பவத்தில் ஈரானின் ஆயுத படைகளில் ஒன்றான இஸ்லாமிய புரட்சி காவல் படையை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர்.

இதில், மூத்த தளபதிகளான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெஜா ஜகேடி மற்றும் மற்றொரு உயரதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ஹதி ஹாஜி ரகீமி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இதனை ஈரான் அரசும் உறுதி செய்தது. இதனால், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானும் உறுதி பூண்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு ஈரான் கடிதம் ஒன்றை அனுப்பியது. ஈரான் அதிபரின் அரசியல் விவகாரத்திற்கான பணியாளர் துணை தலைவர் முகமது ஜம்ஷிதி எழுதிய அந்த கடிதத்தில், நெதன்யாகுவின் வலையில் சிக்க வேண்டாம். அதில் இருந்து, அமெரிக்கா விலகி இருக்க வேண்டும். அதனால், நீங்கள் தாக்குதலில் இருந்து தப்புவீர்கள் என தெரிவித்து உள்ளார்.

இதற்கு பதிலாக, அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று ஈரானிடம் அமெரிக்க அரசு கேட்டு கொண்டுள்ளது என ஜம்ஷிதி கூறியுள்ளார். எனினும், ஈரான் அனுப்பிய தகவல் பற்றி அமெரிக்கா எதுவும் தெரிவிக்கவில்லை.

இதுபற்றி என்.பி.சி. செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், பெயர் வெளியிடாத இரு அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது, பொதுமக்களை விட, இஸ்ரேலுக்குள் ராணுவம் அல்லது நுண்ணறிவு இலக்குகளை நோக்கி எந்த தாக்குதலும் நடத்தப்பட கூடும் என்று அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகம் வருத்தம் கொண்டுள்ளது.

எதிரியான இஸ்ரேலை தாக்குவோம் என ஈரான் தெரிவித்தது. எனினும், எப்போது தாக்குதல் நடத்தப்படும் என்றோ நேரடியாகவா அல்லது லெபனானில் பதுங்கி உள்ள ஹிஜ்புல்லா பயங்கரவாத குழுக்களை கொண்டு தாக்குதல் நடத்துமா என்ற விவரம் எதுவும் வெளிவரவில்லை.

ஹிஜ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவும், சந்தேகமேயின்றி ஈரான் தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது. ஆனால், இந்த விசயத்தில் எங்களுடைய குழு தலையிடாது என கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.