ஐபிஎல்: பெங்களூரு – ராஜஸ்தான் இடையேயான நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுக்கு183 ரன்களை எடுத்திருந்தது.
இதில் விராட் கோலி கடைசிவரை களத்தில் நின்று 72 பந்துகளில் 113 ரன்களை குவித்திருந்தார். இருப்பினும், சேஸிங்கில் ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் 1 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருக்க 19.1வது பந்தில் 94 ரன்களில் இருந்த பட்லர் சிக்ஸர் அடித்து தனது சதத்தை நிறைவு செய்து ராஜஸ்தான் அணியின் வெற்றியை உறுதிசெய்தார். விராட் கோலியை மட்டுமே நம்பி களமிறங்கும் பெங்களூரு அணி மீண்டும் மீண்டும் தோல்வியடைந்து வருவது தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.
இருப்பினும், விராட், நேற்றைய ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் தொடரில் 7,500 ரன்களைக் கடந்து சாதனை படைத்து அதிக ரன்களைக் குவித்த வீரர் பட்டியலில் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார். பெங்களூரு அணி தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும், விராட்டின் தொடர் சாதனைகள் அணியின் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. விராட் கோலி தனிநபராக ஐபிஎல் தொடரில் சாதனைகளைப் படைத்து வரும் அதேசமயம், விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் அதிகப் பந்துகளில் (67 பந்துகளில்) சதம் அடித்ததன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் மிக மெதுவான சதம் அடித்த வீரர் பட்டியலிலும் இணைந்துள்ளார். இதனால் சிலர் விராட் கோலியை சமூக வலைதளங்களில் கேலி செய்தும் வருகின்றனர்.
மணீஷ் பாண்டே – 67 பந்துகள், சச்சின் டெண்டுல்கர் – 66 பந்துகள், டேவிட் வார்னர் – 66 பந்துகள், ஜோஸ் பட்லர் – 66 பந்துகள் என அதிக பந்துகளில் சதம் அடித்து ஐ.பி.எல் வரலாற்றில் மிக மெதுவான சதம் அடித்த வீரர் பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ராஜஸ்தான் அணி, தங்களது ட்விட்டர் பக்கத்தில் நேற்றைய ஆட்டத்தின் வெற்றி குறித்து, ‘200 ரன்களுக்கு மேல் அடிப்பதற்கான சாத்தியங்கள் இருந்தும்,184 ரன்கள் அடித்தது நன்றாக இருக்கிறது’ என்று பதிவிட்டிருப்பதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோலி மீதான விமர்சனம் குறித்த உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடுங்கள்!