புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த வாரம் கைது செய்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் மாபெரும் உண்ணாவிர போராட்டத்தை(‘சமுஹிக் உபாவாசம்’) நடத்தி வருகின்றனர். இதற்கு எதிராக பாஜகவினரும் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி ஜந்தர்மந்தரில் மாபெரும் உண்ணாவிரதம் காலை 10 மணிக்கு தொடங்கி நடந்து வரும் வேளையில், இந்தியாவின் 25 மாநிலங்களில் உள்ள தலைநகரங்களுடன், நியூயார்க், பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், வாஷிங்டன், டோரோன்டோ, மெல்போர்ன் மற்றும் லண்டன் ஆகிய இடங்களிலும் உண்ணாவிரதம் நடக்கிறது. டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏகள், எம்பிகள், கட்சி அலுவலர்கள், தொண்டர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ள டெல்லி அமைச்சர் அதிஷி, “அரவிந்த் கேஜ்ரிவாலை டெல்லி மக்கள் மிகவும் நேசிக்கின்றனர். அவர்கள் கேஜ்ரிவாலை முதல்வராக பார்க்கவில்லை. மாறாக அவர்களின் வீட்டின் மகனாகவோ, சகோதரனாகவோ பார்க்கிறார்கள்.
அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படவேண்டும் என்று அனைத்து மக்களும் விரும்புகின்றனர். மதுபான கொள்கை ஊழல் என்று சொல்லப்படும் இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களின் வீடுகளில் இருந்து பாஜகவின் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-ஆல் ஒரு ரூபாயைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தவிவகாரத்தில் அப்படி ஏதாவது பணம் புழக்கம் நடந்திருந்தால் அது மதுபான வியாபாரி ஷரத் ரெட்டியிடம் இருந்து பாஜகவுக்கு சென்றதுதான். ஏன் பாஜக மீது குற்றம்சாட்டப்படவில்லை, சோதனை நடத்தப்படவில்லை. பாஜகவின் தேசிய தலைவருக்கு சம்மன் அனுப்பப்படவில்லை, அவர் கைது செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஜாஸ்மின் ஷா கூறுகையில், “சர்வாதிகாரத்துக்கு எதிரான குரலை உயர்த்துவதற்காக ஆம் ஆத்மி கட்சி இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது” என்றார்.
முன்னதாக டெல்லி அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், “இந்தியா மற்றும் உலகெங்கிலும் வாழும் இந்தியர்களிடம், மோடியின் சர்வாதிகாரப்போக்கிற்கு எதிராகவும், அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாகவும் குரல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவரை (அரவிந்த் கேஜ்ரிவால்) கைது செய்ய மத்திய அரசு எவ்வாறு சதி செய்து புலனாய்வு அமைப்பை பயன்படுத்தியுள்ளது என்பது அவர் கைது செய்யப்பட்ட நாளில் இருந்து நாளுக்கு நாள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஆம் ஆத்மி கட்சியையும் அரவிந்த் கேஜ்ரிவாலையும் முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மோடி அரசு சதி செய்து போலியான மதுபான ஊழல் வழக்கை புனைந்துள்ளது. ஊழலை ஒழிப்பதாக மோடி பேசும் சமயம் எல்லாம், அவர் அஜித் பவார், அசோக் சவான், சாகன் புஜ்பால் போன்றோரை பாதுகாக்கும் வேலையைச் செய்து இரட்டை வேடம் போடுகிறார்” என்று குற்றம்சாட்டினார்.
இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் இந்த மாபெரும் உண்ணாவிரத போராட்டத்துக்கு எதிராக, பாஜக, ஷரப் சே ஷீஷ் மகால் என்ற போராட்டத்தை டெல்லியில் நடத்தி வருகிறது. இதுகுறித்து பாஜக டெல்லி தலைவர் விரேந்தரா சச்தேவா கூறுகையில், “நாங்கள் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஊழல் மாதிரியை வெளிக்கொண்டுவர விரும்புகிறோம்.
டெல்லி மக்கள் செங்கோட்டையை, குதுப்பினாரை, அக்ஷரதாம் கோயில், தாமரைக் கோயில், கடமைப் பாதையை பார்க்க முடியும், ஆனால், முதல்வரின் ஊழல் மோசடியை பார்க்க முடியாது, கேஜ்ரிவால் ராஜ் மஹாலுக்குள் நுழைய முடியாது. ஷரப் டூ ஷீஷ் என்பது டெல்லி ஊழலின் கதை, அரவிந்த் கேஜ்ரிவால் அதில் குற்றவாளி” என்று தெரிவித்தார்.
டெல்லி மதுபான கொள்கை தொடர்புடைய பணமோசடி வழக்கு சம்மந்தமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மார்ச் 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை ஏப்.14ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, ஏப்.1 முதல் அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.