நவாடா(பிஹார்): சுதந்திரத்துக்குப் பின் 60 ஆண்டுகளில் அடையாத வளர்ச்சியை கடந்த 10 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிஹார் மாநிலம் நவாடாவில் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: “நாட்டில் இருந்து வறுமையை விரட்டுவதற்காகவே நான் இங்கே நிற்கிறேன். கடந்த 2014ம் ஆண்டுக்கு முந்தைய நாட்டின் நிலைமையை என்னால் மறக்க முடியாது. நாட்டின் சாமானிய மக்களில் பலர் குடிசை வீடுகளில் இருந்தனர் அல்லது வீடில்லாமல் இருந்தனர். ஏழைகள் சமையல் ஏரிவாயு இணைப்பு இல்லாமல் இருந்தனர். ஏழைகளுக்கு வழங்கப்பட்ட ரேஷனில் இடைத்தரகர்கள் பயனடைந்தனர். நான் வறுமையில் வாழ்ந்திருக்கிறேன். இந்த ஏழை மகன், ஏழைகளின் சேவகன். சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் எட்டாத வளர்ச்சியை இந்த பத்தாண்டுகளில் நாடு அடைந்துள்ளது.
இதுதான் சரியான நேரம், இந்தியாவுக்கான நேரம் வந்துவிட்டது, நாம் இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்று செங்கோட்டையில் இருந்து நான் சொன்னேன். 2024ம் ஆண்டுத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் நலனுக்காக பிஹார் மக்கள் முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளனர்.
இன்று இந்தியாவிலும், பிஹாரிலும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்பட்டுள்ளன. இன்று பிஹாரில் விரைவு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையங்கள் நவீனபடுத்தப்படுகின்றன. வந்தேபாரத் போன்ற ரயில்கள் அதிகரித்துள்ளன.
இந்த இடம் பிஹாரின் முதல் முதல்வர் பிஹார் கேசரி கிருஷ்ண பாபு பிறந்த இடம். நவாடா லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் பணியாற்றிய இடம். இந்த சிறந்த ஆளுமைகளுக்கு நான் எனது சிரம் தாழ்த்தி வணக்கம் தெரிவிக்கிறேன்.” இவ்வாறு பிரதமர் பேசினார்.
இந்தப் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், “பிஹாரில் வளர்ச்சி வேகமாக நடந்து வருகிறது. கடந்த 2005ம் ஆண்டுக்கு முன்பு பிஹாரின் நிலை என்ன? மாலைக்கு பின்னர் வீட்டை விட்டு வெளியே வரவே முடியாது. இப்போது சுதந்திரமாக எங்கும் சென்று வரலாம். கணவனும் மனைவியும் (லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி) 15 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். ஆனால் எந்த வேலையும் நடக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
நவாடா தொகுதியில் என்டிஏ கூட்டணி சார்பில், மாநிலத்தின் மூத்த பாஜக தலைவர் சி.பி. தாக்குரின் மகன் விவேக் தாக்குர் போட்டியிடுகிறார். முன்னதாக என்டிஏவின் தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி பிஹாரின் ஜமுய் தொகுதியில் நடந்த பேரணியில் பங்கேற்றுத் தொடங்கி வைத்தார். பிஹாரில், நவாடா, கயா, அவுரங்காபாத் மற்றும் ஜமுய் தொகுதிகளுக்கு முதல் கட்டமாக ஏப்.19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்த மக்களவைத் தேர்தலில் பிஹாரில் என்டிஏ கூட்டணியில் பாஜக 17, நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 16, லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) 5, ஜித்தன் ராம் மஞ்ஹியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் ராஷ்ட்ரீய லோக் சாம்தா கட்சி தலா ஒரு இடங்களிலும் போட்டியிடுகின்றன.