புதுச்சேரி: “மதம், சாதியின் பெயரால் பிரசாரம் செய்கிறார் மோடி!” – கடுகடுத்த முதல்வர் ஸ்டாலின்

புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அதற்காக இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், `புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் மண்ணுக்கு வந்திருக்கிறேன். விடுதலை இயக்க தளபதி மக்கள்  தலைவர் வ.சுப்பையாவை போற்றி பாதுகாத்த புரட்சி மண்ணுக்கு வந்திருக்கிறேன். கடல் அழகும், இயற்கை அழகும் கொஞ்சும் புதுவைக்கு  வந்திருக்கிறேன். புதுவை காங்கிரஸ் வேட்பாளராக, இந்தியா கூட்டணி வேட்பாளராக வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவருக்கு  அறிமுகம் தேவையில்லை.

புதுவை மக்களின் நலனுக்காக பாடுபட்ட விடுதலை போராட்டக் குடும்பத்தை சேர்ந்தவர். இப்போது இரண்டாம் விடுதலை போராட்டத்துக்கான வேட்பாளராக நிற்கிறார். எட்டு முறை எம்.எல்.ஏ, 40 ஆண்டுகள் காங்கிரஸ் உறுப்பினர், முதலமைச்சர், அமைச்சர், எதிர்கட்சித் தலைவர், சபாநாயகர் உள்ளிட்ட பதவிகளை அலங்கரித்த, பழுத்த அரசியலுக்கு சொந்தமானவர். இரண்டாவது முறையாக நாடாளுமன்றம் செல்வதற்கு ஆதரவு கேட்டு  இருகரம் கூப்பி ஆதரவு கேட்டு நிற்கிறார். கடந்த தேர்தலை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். 

முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை புத்தகம் தடை செய்யப்பட்டபோது, அதை துணிச்சலாக வெளியிட்ட கவிஞர் புதுவை சிவம் பிறந்த மண் இது. கலைஞர்  அரசியல் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய மண் புதுவை. எனவே கலைஞருக்கு தமிழகமும், புதுவையும் ஒன்றுதான். அந்த உணர்வோடு  ஸ்டாலினும் புதுவை மக்கள் மீது தனி பாசம் கொண்டவன். அந்த உணர்வோடுதான் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன்.

கவர்னர்களை வைத்து தொல்லை கொடுப்பது எதிர்கட்சி மாநிலங்களுக்கு மட்டுமல்ல. புதுவையில் ஆளும் கூட்டணியில் உள்ள ரங்கசாமிக்கும் கவர்னரால் ஏகப்பட்ட நெருக்கடி. பா.ஜ.க-வை பொறுத்தவரை புதுவை மக்களின் முன்னேற்றம், வளர்ச்சியைப்  பற்றி கவலைப்பட மாட்டார்கள். அதிகாரத்தை கைப்பற்ற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதுதான் பா.ஜ.க-வின் கொள்கை. தமிழகத்தைப் போல மாநிலமாக இருந்தால் அதை நகராட்சியாக மாற்றிவிட வேண்டும். புதுவையைப் போல யூனியன் பிரதேசமாக இருந்தால், அதை கிராம பஞ்சாயத்தாக மாற்றிவிட  வேண்டும்.

ஒட்டுமொத்தாக அனைவரும் டெல்லிக்கு கீழ் இருக்க வேண்டும். இதுதான் பா.ஜ.க-வின் தீர்மானம். அதனால்தான் கூட்டணி அரசு  இருந்தாலும், புதுவைக்கு மாநில அந்தஸ்தை வழங்காமல், தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கிறது பா.ஜ.க அவர்களின் கைப்பாவையாக இருக்கிறார் புதுவை  முதலமைச்சர் ரங்கசாமி. இந்த அவலங்கள் தீர இந்தியா கூட்டணி ஒன்றியத்தில் ஆட்சிக்கு வர வேண்டும். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சியில் அமரும்போது, சாதனைகளாக மாறப்போகும் வாக்குறுதிகளை கூறியிருக்கிறோம். அதில்  முக்கிய வாக்குறுதியாக புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். அது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் எதிரொலித்திருக்கிறது. மாநிலங்களுக்கும், நாட்டுக்கும் நம்பிக்கை அளிக்கும் தேர்தல் அறிக்கையாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது. தி.மு.க சார்பில்  அளிக்கப்படும் வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையாக அளித்திருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ் பிடியில் சிக்கியுள்ள சர்வதேச நகரமான ஆரோவில்லை, அரவிந்த அன்னையின் கனவுப்படி செயல்பட நடவடிக்கை  எடுக்கப்படும். புதிய கல்விக் கொள்கை புதுவையில் நீக்கப்படும். ஜிப்மரில் மீண்டும் இலவச மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை  வழங்கப்படும்.

பிரசார மேடையில் முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர் வைத்திலிங்கம்

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் புதுவை மக்களுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும். காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும். காரைக்கால் துறைமுகம் புதுவை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதமர் மோடி மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் பிரசாரம் செய்கிறார். சமூகநீதி, இடஒதுக்கீடு பற்றி அவர்  பேசுவதில்லை. 10 ஆண்டுகள் மோடி ஆட்சியில் புதுவைக்கு இழைக்கப்பட்ட அநீதிகள்தான் அதிகம். மின் துறையை தனியாருக்கு தாரை வார்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதனால் மின் துறை ஊழியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. மின் கட்டண விலையை கேட்டால் ஷாக் அடிக்கிறது. துணை நிலை ஆளுநர் மூலம் அரசியல்  கூத்துகளை அரங்கேற்றி வருகின்றனர். கிரண் பேடிக்கு பிறகு சகோதரி தமிழிசை வந்தார். புதுவையில் உட்கார்ந்துகொண்டு, தமிழக அரசியலை பேசினார். தேர்தல் வந்தவுடன் பா.ஜ.க-வுக்கு திரும்பச் சென்றுவிட்டார். இங்கு வாக்கு சேகரிக்க வந்த மோடி  பெஸ்ட் புதுச்சேரி ஆக்குவேன் என கூறினார். செய்தாரா? நாராயணசாமி கட்சி மேலிடத்தை கேட்டு நடப்பதாக குறை கூறினார்கள். இப்போது, வேறு கட்சியை சேர்ந்த ரங்கசாமியை தங்களின் பேச்சை கேட்கச் சொல்லி என்ன பாடுபடுத்துகிறார்கள்?

அவர் ஆள்தான் உயரம். உயரமாக இருந்து என்ன பிரயோஜனம்? உயரத்துக்கு தகுந்த அறிவும், சுயமரியாதையும் இருக்க வேண்டும். புதுவையில் ஒரு நாடாளுமன்றத் தொகுதிதான் உள்ளது. அதிலும் பா.ஜ.க-தான் போட்டியிடும் என  ரங்கசாமி வாயால் சொல்ல வைத்தீர்கள். ரங்கசாமி தனிக்கட்சி ஆரம்பிக்க காரணமே நமச்சிவாயம்தான். இப்போது நமச்சிவாயத்துக்கு ஓட்டு  கேட்டு வரும் நிலைமையை ரங்கசாமிக்கு உருவாக்கி, அவர் கட்சியை உங்கள் கட்டுப்பாட்டில் வைப்பதுதான் ஜனநாயகமா? உள்துறை  அமைச்சராக சும்மா உட்கார்ந்து இருந்தவரை தேர்தலில் நிறுத்தியுள்ளனர். நமச்சிவாயம் எத்தனை கட்சி மாறியுள்ளார் என கணக்கு போட்டு  பார்த்தால் எனக்கே தலை சுற்றுகிறது.

தி.மு.க, ம.தி.மு.க, த.மா.க, பு.ம.க, மறுபடியும் த.மா.க, காங்கிரஸ் கட்சிகளுக்குச் சென்று தற்போது பா.ஜ.க-வுக்குச் சென்றிருக்கிறார். இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து நான் வந்தால், அவர் எந்த கட்சியில் இருப்பாரோ? யாமறியேன் பராபரமே. நமச்சிவாயத்துக்கும் அது தெரியாது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர்கூட தாக்கப்படமாட்டார், கைது செய்யப்பட மாட்டார் என்று கூறினார் மோடி. ஆனால் அதை தடுக்க முடிந்ததா? அவர் விஸ்வகுரு அல்ல,மெளனகுரு. பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு  சீர்குலைந்துவிட்டது. சமீபத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஆர்த்தி கூட்டுப் பாலியல் படுகொலை செய்யப்பட்டார்.

நாடே அதிர்ச்சியடைந்தது. பா.ஜ.க கூட்டணி ஆட்சியில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. ரங்கசாமியை டம்மியாக உட்கார வைத்துவிட்டு, பா.ஜ.க பம்மாத்து ஆட்சியை நடத்துகிறது. புதுவையில் ரேஷன் கடைகள் கூட இல்லாமல் வயிற்றில் அடித்துள்ளது. தேர்தல் வந்தால் மட்டும்தான் ரங்கசாமிக்கு மாநில அந்தஸ்து பற்றி நினைவுக்கு வரும். ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி கட்சி ஆட்சிக்கு வந்தால் தேனாறும், பாலறும் ஓடும் என்றார்கள். புதுவையில் ஓடியதா? புதுவை மக்கள் போராடி பெற்ற உரிமையை, மத்திய மோடி அரசை பறிக்கவிட்டு வேடிக்கை பார்த்த ரங்கசாமி, எந்த முகத்துடன் பா.ஜ.க-வுக்கு வாக்கு கேட்டு வருகிறார் ? மற்றொரு பக்கம் பாதம் தாங்கி பழனிசாமியின் அ.தி.மு.க வருகிறது. அந்த கூட்டணியைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை, சிம்ப்ளி வேஸ்ட். பா.ஜ.க வேட்பாளர் நன்மைக்காகத்தான், அ.தி.மு.க தேர்தலில் நிற்கிறது என்பது புதுவை மக்களுக்கு தெரியும். சாதி, மத, இன, மொழி கடந்து புதுவை மக்கள் ஒற்றுமையாக வாழக்கூடியவர்கள். ஒன்றிய மோடி அரசின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு புதுவை மக்கள் பலியாகி விடக்கூடாது.  மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் வார்த்தைகளில் முடிக்கிறேன். புதுவை என்பது படுத்துக்கொண்டிருக்கும் சிங்கம். அந்த சிங்கத்துக்கு சோதனை வந்தால் சிலிர்த்து எழும்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.