சந்திரபாபு நாயுடு குறித்த விமர்சனம் – ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை அருந்ததி திரைப்படத்தின் வில்லனுடன் ஒப்பிட்டும், மற்றொரு நிகழ்வில் வாடிக்கையான குற்றவாளி என்றும் ஜெகன்மோகன் ரெட்டி விமர்சித்ததாகக் குற்றம்சாட்டி தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த வர்லா ராமைய்யா என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

அந்தப் புகார் மனுவில், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது ஜெகன்மோகன் ரெட்டி, இந்தத் தேர்தல் ஜெகனுக்கும் சந்திரபாபுவுக்கும் நடக்கும் யுத்தம் இல்லை. மாறாக பொதுமக்களை ஏமாற்றுவதை தொழிலாக வைத்திருக்கும் வாடிக்கையான குற்றவாளியான சந்திரபாபுவுக்கும் மக்களுக்கும் இடையிலான போர்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு பேச்சில், அருந்ததி திரைப்படத்தில் கல்லறையில் இருந்து வெளியே வரும் பேயைப் போல, 5 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியே வந்து ஆட்சிக்காக ஏங்குகிறார் எனத் தெரிவித்துள்ளார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அந்த மனுவில் ஆந்திராவின் இன்னாள் முதல்வர், முன்னாள் முதல்வரை தாக்கிப் பேசியிருக்கும் வேறு சில பேச்சுக்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஜெகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேர்தல் ஆணையம் அனுப்பியிருக்கும் நோட்டீஸில், “இத்தகையப் பேச்சின் மூலமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தேர்தல் நடத்தை விதிகளை மீறியிருப்பதாக கருதப்படுகிறது. இதுகுறித்து 48 மணிநேரத்துக்குள் ஆந்திர முதல்வர் பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தல் மே 13ம் தேதி நடக்க இருக்கிறது. அதனுடன் சேர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலும் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ம் தேதி நடைபெற இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.