மயிலாடுதுறை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திமுகவின் பினாமியாகச் செயல்படுகிறார் என இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் விமர்சித்துள்ளார்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் ம.க.ஸ்டாலினை ஆதரித்து, கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில், புதிய அறிவிப்புகளை அறிவிக்கின்றார்கள். அவர்கள் தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சும், தேர்தலுக்கு பின்பு ஒரு பேச்சும் பேசி வருகின்றார்கள்.
திமுக ஆட்சி அமைந்து 100 நாட்களில் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிப்போம் எனத் தமிழக முதல்வர் அறிவித்தார். ஆனால் இதுவரை அறிவிக்கவில்லை. அவர்கள், தேர்தலில் அறிவிக்கும் வாக்குறுதிகளை ஏமாற்றக்கூடியவர்களாக உள்ளனர்.
இதே போல் ‘இதுவரை 1 கோடிக்கு மேல் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தொகை வழங்கி உள்ளோம், மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு மீதம் உள்ளவர்களுக்கு அந்தத் தொகை வழங்குவோம்’ என்று அவர்கள் பேசியுள்ளது தேர்தல் விதிமுறைகளை மீறியதாகும்.
தேர்தல் பணியாற்றும் அதிகாரிகள், ஆளும் திமுகவிற்கு விசுவாசமாக உள்ளனர். தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. பிரதமர் மோடியை விமர்சனம் செய்த உதயநிதியின் பேச்சை மக்கள் நம்பமாட்டார்கள். காவிரி, கச்சத்தீவு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளிலும், தமிழக மக்களுக்கு துரோகம் செய்தது திமுகதான்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கும்பகோணம் மாநகராட்சி மேயரை, திமுகவைச் சேர்ந்தவர்கள் தேர்தல் தொடர்பான கூட்டங்களுக்கு அழைப்பதில்லை. அக்கட்சியினரை பல இடங்களில் அவமானப்படுத்துகிறார்கள்.
இதுதான் தற்போதைய திமுகவின் சமூக நீதி, இண்டியா கூட்டணியின் சமத்துவ கொள்கை. இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுகவின் பினாமியாகச் செயல்படுகிறார். அறிவாலயத்தின் ஒட்டுத் திண்ணையாகக் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் திமுகவின் பிடி தளர்ந்து விட்டது. நிச்சயமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்” என்று அர்ஜுன் சம்பத் பேசினார்.
தொடர்ந்து, திருநாகேஸ்வரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, திமுக அரசைக் கேலி செய்யும் விதமாக அர்ஜூன் சம்பத் பொதுமக்களுக்கு அல்வா வழங்கினார்.