புதுடெல்லி: தேர்தல் பிரச்சாரம் தொடர்பான செயல்பாடுகளுக்கு அனுமதி கோரி, சுவிதா இணையத்தில் 73,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், இவற்றில் 44,600 வேண்டுகோள்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரச்சாரம் தொடர்பான செயல்பாடுகளுக்கு தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் அனுமதி பெற வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப சுவிதா என்ற இணையதள வசதியை தேர்தல் ஆணையம் உருவாக்கியது.
இது குறித்து தேர்தல் ஆணை யம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுவிதா இணையதளத்தில் பிரச்சாரம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அனுமதி கோரிஅரசியல் கட்சிகளிடம் இருந்து 73,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. பொதுக்கூட்ட மைதானங்கள், தற்காலிக கட்சி அலுவலகங்கள் திறப்பு, வீடியோ பிரச்சார வேன்களை இயக்குவது, வீடு வீடாக பிரச்சாரம் செல்வது, ஹெலிகாப்டர்கள் மற்றும் ஹெலிபேடுகளை பயன்படுத்துவது, துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பது போன்றவை தொடர்பாக இந்த விண்ணப்பங்கள் வந்தன.
இவற்றில் 44,600 வேண்டுகோள்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. 11,200 வேண்டுகோள்கள் நிராகரிக்கப்பட்டன. 10,819 விண்ணப்பங்கள் செல்லாதது என ரத்து செய்யப்பட்டன. தமிழகத்திலிருந்து மிக அதிகளவில் 23,239 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அடுத்ததாக மேற்கு வங்கத்திலிருந்து 11,976 விண்ணப்பங்களும், மத்திய பிரதேசத் தில் இருந்து 10, 636 விண்ணப் பங்களும் வந்துள்ளன. சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் குறைந்த அளவாக 17 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன. இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.